Press "Enter" to skip to content

பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை

தமிழகத்தில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 1 கோடி பேர் ஆகும். பிளஸ்-2 வகுப்பில் மட்டும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் உள்ளனர்.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

கொரோனா தொற்று குறையாததால் 1-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

கொரோனா முதல் அலை இந்த ஆண்டு தொடக்கத்தில் குறைந்தது. இதனால் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு அறிவித்தது. விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அடுத்த சில தினங்களில் கொரோனா 2-வது அலை தாக்க தொடங்கியது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன. இதன் காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மாணவர்கள் கணினிமய மூலம் பாடம் கற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 1 கோடி பேர் ஆகும். பிளஸ்-2 வகுப்பில் மட்டும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் உள்ளனர். கணினிமய வகுப்பு காரணமாக மாணவர்கள் மத்தியில் கடும் தவிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா 2-வது அலை கணிசமான அளவுக்கு குறைந்து வருகிறது. கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா 2-வது அலை கடந்த மாதத்தில் இருந்து குறையத் தொடங்கியுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை 1,800-க்கும் கீழ் உள்ளது.

கொரோனா தாக்கம் குறைந்து விட்டதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த மாதமே தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியதால் பள்ளிகள் திறக்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டது.

ஆனால் கொரோனா அச்சம் குறைந்தால்தான் பள்ளி, கல்லூரிகளை திறப்பது பற்றி தமிழக அரசு ஆலோசனை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 16-ந்தேதி 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்து விட்டு பிறகு அதை திரும்பப்பெற பெற்றார்.

எனவே பள்ளி, கல்லூரிகளை திறக்கும் முன்பு அனைத்து சூழ்நிலைகளையும் மிகவும் விரிவாக ஆய்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக பக்கத்து மாநிலங்களில் கொரோனா நிலவரத்தை கண்காணித்து அதற்கேற்ப செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தாக்கம் தற்போது கட்டுக்கடங்காத அளவுக்கு உள்ளது. தினமும் சராசரியாக சுமார் 17 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். இதுபற்றியும் தமிழக பள்ளிக்கல்வித்துறை கவனத்தில் எடுத்துள்ளது.

இதற்கிடையே தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறக்க மீண்டும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. தொடர்ந்து 2-வது கல்வி ஆண்டாக பள்ளிகளை மூடிப்போட்டால் மாணவர்களின் கவனம் திசை மாறி விடும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன.

இதையடுத்து பள்ளி, கல்லூரிகளை திறப்பது பற்றி தமிழக அரசு மீண்டும் ஆலோசிக்க தீர்மானித்துள்ளது. தற்போது பொதுமுடக்கம் வருகிற 31-ந்தேதி வரை உள்ளது.

இந்த பொதுமுடக்கத்தில் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது பற்றி விரைவில் நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது பள்ளி, கல்லூரிகளை திறப்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக சென்னை முகப்பேர் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ”உயிர்கோள அடர்வனம்” திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் காரணமாக பள்ளிக்கூடங்கள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு தான் மிக முக்கியம்.

தற்போது கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த சூழலில் பள்ளிக்கூடங்கள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைப்படிதான் ஒவ்வொரு மாதமும் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்தும் ஆலோசித்துதான் முடிவு எடுக்கப்படும்.

தமிழகத்தில் முதலில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்களை திறக்கலாமா? என்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுப்பார்.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கும்போது ஆலோசிப்பது போல் பள்ளிக்கூடங்களை திறப்பது சம்பந்தமாகவும் ஆலோசித்துதான் முடிவு தெரிவிக்கப்படும். அந்த வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து விரைவில் அறிவிப்பார்.

அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம். மிக விரைவில் முதல்-அமைச்சரின் வழிகாட்டுதல்படி அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளமாக மாறும். நீட் தேர்வை பொறுத்தவரை ஒட்டுமொத்த தமிழகத்தின் நிலைப்பாடும் நீட் தேர்வுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடும். அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்து வரும் நிலையில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியாரும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முன்வர வேண்டும். பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர்கள் தைரியமாக முன்வர வேண்டும்.

ஆசிரியர் தகுதி தேர்வில் குழப்பம் உள்ளது என கூறுகிறார்கள். எனவே அதில் மாற்றம் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருகிறோம். கொரோனா கட்டுக்குள் வந்த பின், தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தை, டி.என்.பி.சி.யுடன் இணைக்கும் திட்டம் இல்லை. அம்பத்தூர் பகுதியில் அரசு ஆண்கள் பள்ளி வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் அது குறித்து முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »