Press "Enter" to skip to content

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடியில் உள்ள தனது வீட்டு முன்பாக போராட்டம் நடத்தினார்.

சென்னை:

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், கல்லெண்ணெய்-டீசல் விலை குறைக்கப்படும், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தரப்படும் என்பது உள்பட பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து இருந்தது.

இந்த வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்று அ.தி.மு.க. குற்றம் சுமத்தி உள்ளது.

தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு முன்பு பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.

அதன்படி தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு தி.மு.க. அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதே போல சேலம் மாநகரில் உள்ள 8 பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடியில் உள்ள தனது வீட்டு முன்பாக போராட்டம் நடத்தினார். அப்போது அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் அ.தி.மு.க. நகர செயலாளர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்தினார்.

திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் உள்ள தனது வீட்டு முன்பு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வேம்பார்பட்டியில் உள்ள தனது வீட்டு முன்பு முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் அவரவர் வீட்டு முன்பு போராட்டம் நடத்தினர்.

கோவை குனியமுத்தூர் பஸ் நிலையம் அருகில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் தென்னூர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மில்கேட் பகுதியில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் போராட்டம் நடந்தது.

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் தலைமையில் இலுப்பூர் பகுதியில் அ.தி.மு.க.வினர் பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க. புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கோபி அருகே உள்ள குள்ளம் பாளையத்தில் உள்ள தனது தோட்டத்து வீட்டின் முன்பு நின்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதேபோல் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கருப்பணன் எம்.எல்.ஏ. கவுந்தப்பாடி தம்பி நகரில் உள்ள தனது வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷம் எழுப்பியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டத்தில் ஈ.சி.ஆர். சாலையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்டத்தில் 24 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர்ராஜூ எம்.எல்.ஏ. கடம்பூரில் உள்ள அவரது வீட்டு முன்பு மனைவி, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அ.தி.மு.க.வினருடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் பண்டாரவிளையில் உள்ள அவரது வீட்டு முன்பு ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தச்சநல்லூரில் உள்ள அவரது வீட்டு முன்பு நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

மதுரை மதிச்சியம் பனகல் பார்க் சாலையிலுள்ள கட்சி அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

மதுரை மாநகரின் அனைத்து பகுதிகளிலும் வாக்குச்சாவடி வாரியாக அ.தி.மு.க.வினர் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புறநகர் மேற்கு மாவட்டத்தில் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் எம்.எல்.ஏ., தலைமையிலும் மதுரை பசுமலையில் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் ராஜேந்திர பாலாஜி திருத்தங்கலில் உள்ள தனது வீட்டு முன்பு பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். விருதுநகரில் 16 இடங்களில் போராட்டம் நடந்தது.

கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் தோவாளையில் உள்ள தனது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் செய்தார்.

குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. அசோகன் நாகர்கோவில் சாந்தான் செட்டிவிளையில் உள்ள அவரது வீட்டின் முன்பு ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தார். முன்னாள் அமைச்சர் பச்சைமால் தம்மத்துகோணத்தில் உள்ள வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »