Press "Enter" to skip to content

நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சுமார் 1 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் அமெரிக்கா

பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து, லாவோஸ், பப்புவா நியூகினியா, கம்போடியா ஆகிய நாடுகளுக்கும், வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் 92 நாடுகளுக்கும் தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.

வாஷிங்டன்:

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவும் வகையில் தங்கள் வசம் உள்ள 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வரும் நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அடுத்த 6 மாதங்களுக்குள் தடுப்பூசி மற்ற நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அந்த வகையில் ஆசிய நாடுகளான மலேசியா, இந்தோனேசியா, நேப்பாள், பூட்டான் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க அரசு கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்தது. இது தவிர பிற ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து, லாவோஸ், பப்புவா நியூகினியா, கம்போடியா ஆகிய நாடுகளுக்கும், வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் 92 நாடுகளுக்கும் தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுமார் 1 கோடி தடுப்பூசிகளை விரைவில் வழங்க இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நைஜீரியாவிற்கு 40 லட்சம் ‘மாடர்னா’ தடுப்பூசிகளும், தென் ஆப்பிரிக்காவிற்கு 56 லட்சம் தடுப்பூசிகளும் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1.64 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் நைஜீரியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு தடுப்பூசிகளை அனுப்பி வைப்பதன் மூலம், அதிபர் ஜோ பைடன் உறுதியளித்தபடி உலக நாடுகளுக்கு 8 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »