Press "Enter" to skip to content

சேலம் மாவட்டத்தில் இன்று 138 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி 2-ம் தவணை போடப்படுகிறது

சேலம் மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.

சேலம்:

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காப்பதற்காக நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அதன்படி சேலத்தில் ஆரம்ப கட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டன. பின்னர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது.

அதன்படி சென்னையில் இருந்து சேலத்துக்கு வரும் தடுப்பூசிகள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள 138 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இருப்பு இருக்கும் போது பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது. இல்லாத நாட்களில் தடுப்பூசி போடப்படாது என்று மாவட்டம் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

சேலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 17 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. இதைத்தொடர்ந்து நேற்று 138 மையங்களில் 2-ம் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட்டன. இந்த நிலையில் சேலத்திற்கு நேற்று 38 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, சேலத்திற்கு 38 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்து உள்ளன. அதில் சேலம் சுகாதார மாவட்டத்திற்கு 9,500-ம், ஆத்தூர் சுகாதார மாவட்டத்திற்கு 3 ஆயிரம் தடுப்பூசிகளும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அதே போன்று தர்மபுரிக்கு 7 ஆயிரத்து 500, கிருஷ்ணகிரிக்கு 11 ஆயிரத்து 500, நாமக்கல்லுக்கு 7 ஆயிரம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) 2-ம் தவணை தடுப்பூசி மட்டும் 138 மையங்களில் போடப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என்று கூறினர்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »