Press "Enter" to skip to content

அயோத்தி ராமர் கோவில் 2023-ம் ஆண்டு பக்தர்களுக்கு திறப்பு?

இந்தக் கோவில் அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தலைமையில் என்ஜினீயர்கள், கட்டுமான வல்லுனர்கள் கடந்த மாதம் 2 நாட்கள் கூடிப்பேசினர்.

அயோத்தி :

அயோத்தியில் சுமார் ரூ.1,100 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்படுகிறது. இது உலகமெங்கும் உள்ள இந்துக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தக் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, வெள்ளி செங்கல்லை எடுத்துக்கொடுத்து கட்டுமானப்பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்தக் கோவில் அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தலைமையில் என்ஜினீயர்கள், கட்டுமான வல்லுனர்கள் கடந்த மாதம் 2 நாட்கள் கூடிப்பேசினர். அப்போது ராமர் கோவிலை 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பக்தர்களுக்காக திறப்பது என முடிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து ராமர் கோவிலில் வழிபாடு நடத்த பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த தகவல்கள் இப்போதுதான் கசிந்துள்ளன.

அதே நேரத்தில் கோவில் வளாகத்தின் கட்டுமானப்பணிகள் முழுமையாக 2025 இறுதியில்தான் முடியும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தக் கோவிலுக்கான அஸ்திவாரப்பணிகள் செப்டம்பர் 15-ந் தேதிக்குள் முடிவடையும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தக் கோவில் 3 தளங்கள், 5 குவி மாடங்கள், கோபுரங்கள், 360 தூண்கள் என மிக பிரமாண்டமாக உருவாகப்போகிறது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு திறக்கப்படுகிறபோது அது உலகளவில் பக்தர்களை கவரும். இதற்காக அங்கு அதிநவீன விமான நிலையத்தை உருவாக்க இந்திய விமான நிலைய ஆணையம் ரூ.224 கோடியை அனுமதித்து இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த விமான நிலைய மேம்பாட்டுக்காக மாநில அரசு 270 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »