Press "Enter" to skip to content

வருமானத்துக்கு அதிகமாக ரூ.27.22 கோடிக்கு சொத்து குவிப்பு- விஜயபாஸ்கர் மீது வழக்கு

விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலத்தில் தனது பெயரிலும், மனைவி, மகள்கள் பெயரிலும் அதிகளவில் சொத்துக்கள் வாங்கி இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை:

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தனது வேட்புமனு தாக்கல் பிரமாண பத்திரத்தில் தனது சொத்து மதிப்பு ரூ. 6 கோடி 44 லட்சத்து 91 ஆயிரத்து 310 என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு ஆய்வில் அவர் சொத்து பல மடங்கு அதிகரித்துள்ளது தெரிய வந்தது. 1.4.2016 முதல் 31.3.2021 வரையில் அவரது சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.27 கோடிக்கு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் எப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விஜயபாஸ்கர் பெயர் முதலாவதாகவும், ரம்யாவின் பெயர் 2-வதாகவும் இடம் பெற்றுள்ளது.

விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலத்தில் தனது பெயரிலும், மனைவி, மகள்கள் பெயரிலும் அதிகளவில் சொத்துக்கள் வாங்கி இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் விராலி மலை தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி ஏற்ற பிறகு ரூ.27 கோடிக்கு மேல் சொத்துக்களை வாங்கி இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் விஜயபாஸ்கர் 7 கொட்டும் பார வண்டிகள், பி.எம்.டபிள்யூ தேர் ஆகியவற்றை வாங்கி இருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எம்.டபிள்யூ காரின் மதிப்பு ரூ.53 லட்சத்து 33 ஆயிரத்து 156 என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொட்டும் பார வண்டி உள்பட பார வண்டிகளில் மதிப்பு ரூ.6 கோடியே 58 லட்சத்து 78 ஆயிரத்து 456 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 85.12 பவுன் தங்க நகைகளை விஜயபாஸ்கர் குடும்பத்தினர் வாங்கி இருப்பதாகவும் இதன் மதிப்பு ரூ. 40 லட்சத்து 58 ஆயிரத்து 975 எனவும் தெரிவிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் மொரப்பாக்கம் மற்றும் சில்லாவட்டம் பகுதிகளில் ரூ.3 கோடியே 99 லட்சத்து 5 ஆயிரத்து 400 மதிப்பில் விவசாய நிலங்கள் உள்ளதாகவும், சென்னையில் பகீரதி அம்மாள் தெருவில் உள்ள வீட்டின் மதிப்பு ரூ.14 கோடியே 57 லட்சத்து 65 ஆயிரம் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தற்போது விஜயபாஸ்கரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.58 கோடியே 64 லட்சத்து 25 ஆயிரத்து 887 என்பது தெரிய வந்துள்ளது.

Related Tags :

[embedded content]

 விஜயபாஸ்கர் பற்றிய செய்திகள் இதுவரை…

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »