Press "Enter" to skip to content

நாமக்கல் கலெக்டருக்கு கொரோனா

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தனது பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் முகாம் அலுவலகத்தில் தங்கி பணியாற்றி வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் ஓணம் பண்டிகைக்காக சொந்த மாநிலமான கேரளாவுக்கு சென்று வந்தார். அப்போது கடுமையான நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காய்ச்சலால் மாவட்ட ஆட்சியர் மற்றும் அவரது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். பின்னர் தீவிர சிகிச்சைக்கு பின்பு அவர்கள் குணமடைந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் மற்றும் அவரது குடும்பத்தில் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வந்தனர். இருப்பினும் காய்ச்சல் விட்டு விட்டு வந்ததால், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

இதில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் மற்றும் அவரது குடும்பத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் அவரது குடும்பத்தினர் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதால் லேசான பாதிப்பு மட்டுமே இருப்பதாகவும், இதனால் அவர் விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவார் எனவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »