Press "Enter" to skip to content

அடைமழை (கனமழை)யால் தத்தளிப்பு: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரகாண்ட் விரைகிறார்

அடைமழை (கனமழை)யால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவால் உத்தரகாண்ட் உருக்குலைந்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாலை அங்கு செல்கிறார்.

கேரளாவை போன்று உத்தரகாண்ட் மாநிலத்திலும் பலத்த மழையினால் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 5 நாட்களாக அங்கு தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மேகவெடிப்பு ஏற்பட்டு மிக அதிக மழை கொட்டியது. அங்குள்ள அல்மோரா பகுதியில் ஒரே நேரத்தில் 21 செ.மீட்டர் மழை பெய்தது.

இதேபோல மற்ற இடங்களிலும் அதிகளவில் மழை பெய்தது. உத்தரகாண்ட் மாநிலம் இமயமலையில் அமைந்துள்ளது. மலைப்பிரதேச பகுதி என்பதால் பல இடங்களில் மழையினால் நிலச்சரிவு ஏற்பட்டது. வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி ஏராளமானோர் பலியானார்கள். இதுவரை 48 பேர் உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் நிலச்சரிவில் சிக்கி இருப்பவர்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஏனென்றால் அந்த பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் முழுவதும் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மீட்புகுழுவினர் செல்ல முடியவில்லை. உள்ளூர் மக்களே எந்த வசதியும் இல்லாத நிலையில் மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள்.

நிலச்சரிவு இடிபாடுகளுக்குள் இருந்து தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலர் உயிரிழந்து இருக்கிறார்கள். 10-க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்களும் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை பார்வையிடுவதற்காக இன்று மாலை உத்தரகாண்ட் விரைகிறார். சென்ற உடன் அதிகாரிகளுடன் உத்தரகாண்டில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்துகிறார். நாளை வான்வழியாக வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை ஆய்வு செய்கிறார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »