Press "Enter" to skip to content

குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

உத்தர பிரதேச மாநிலத்தில் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. கொழும்பு நகரில் இருந்து முதல் விமானம் தரையிறங்குகிறது.

உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் ரூ.260 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. புத்தபிரான் மகாபரிநிர்வானா அடைந்த இடத்தைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச யாத்ரீகர்களுக்கு வசதியாக இது அமைவதுடன், உலகெங்கும் உள்ள புத்தரின் யாத்திரைத் தலங்களை இணைக்கும் வகையிலும் செயல்படும்.

இந்த விமான நிலையம் அதன் அருகில் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாருக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கும் பெரிதும் பயன்படுவதுடன், அப்பகுதியில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாக்குவதையும் ஊக்குவிக்கும். குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை பிரதமர் மோடி குஷிநகர் விமான நிலையத்தை திறந்து வைத்தார். விழா மேடையில் உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முதல் விமானம் இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து புறப்பட்டு குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குகிறது. இந்த விமானத்தில் இலங்கையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட புத்த துறவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய குழுவினர் வருகை தர உள்ளனர்.

இதில் புத்தமதக் கொள்கைகளைப் பரப்பும் 12 பேர் இடம் பெற்றிருப்பதுடன், புத்தரின் புனித நூல்களையும், குஷிநகரில் காட்சிப்படுத்துவற்காக எடுத்து வருகின்றனர். இந்த பிரதிநிதிகள் குழுவில், இலங்கை புத்த மதத்தின் நான்கு பிரிவுகளான அஸ்கிரியா, ஆமராபுரா, ராமன்யா, மால்வட்டா ஆகிய நிகாதாக்களைச் சேர்ந்த அணுநாயகர்கள் (துணைத்தலைவர்கள்) மற்றும் இலங்கை அமைச்சர் நமல் ராஜபக்சே தலைமையில் ஐந்து அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »