Press "Enter" to skip to content

தமிழகத்தில் யாருக்கும் ஒமிக்ரான் தொற்று இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கொரோனா மரபணு மாற்றத்தை தெரிந்து கொள்ள வசதியாக உயர்தரமான முழு மரபணு பரிசோதனை மையத்தை முதல்-அமைச்சர் கடந்த மாதம் திறந்து வைத்தார்.

சென்னை:

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் முழு கவசஉடை அணிந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகம், துணை இயக்குநர் ராஜு உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

கொரோனா வைரசின் தன்மைகளை கண்டறிவதற்கு ஏராளமான அதிநவீன வசதிகள் கொண்ட ஆய்வகங்கள் தமிழகத்தில் அரசும், தனியார் நிறுவனங்களும் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் இதுவரை 5 கோடியே 40 லட்சத்து 69 ஆயிரத்து 791 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டு இருக்கிறது. மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் இதுவரை 23 லட்சம் சளி மாதிரிகள் கொண்டு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பப்பட்டு இருக்கிறது.

கொரோனா மரபணு மாற்றத்தை தெரிந்து கொள்ள வசதியாக உயர்தரமான முழு மரபணு பரிசோதனை மையத்தை முதல்-அமைச்சர் கடந்த மாதம் திறந்து வைத்தார். இந்த மையத்தில் இதுவரை 469 மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதில் 95 சதவீதத்திற்கும் மேலாக அந்த சோதனைகளின் முடிவில் ‘டெல்டா’ வகை நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தான் என்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை இந்த உயர்தரமான முழு மரபணு பரிசோதனைக்காக 6 ஆயிரத்து 714 மாதிரிகள் அனுப்பிவைக்கப்பட்டது. இதில் 4 ஆயிரத்து 618 மாதிரிகளுக்கு பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது.

இந்த மாதிரிகளில் 96 சதவீதம் ‘டெல்டா‘ வகை நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) என தெரியவந்துள்ளது. இப்பொழுது புதிதாக ‘ஒமிக்ரான்’ வகை நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலகம் முழுவதும் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ‘கிளஸ்டர்’ பாதிப்பு இருக்கும் 8 வகையான இடங்களில், மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உடனடியாக இந்த முழு மரபணு பரிசோதனை செய்யப்படுகிறது. அப்படி செய்யப்பட்டதில் இதுவரை ‘டெல்டா’ நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) வைரசாகவே இருந்து கொண்டு இருக்கிறது. யாருக்கும் ஒமிக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »