Press "Enter" to skip to content

இன்று மாலை தைப்பூசத் தேரோட்டம்: தடையை மீறி காவடிகளுடன் பழனியில் குவிந்த பக்தர்கள்

பழனியில் இன்று மாலை தைப்பூசத் தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் அரசு விதித்த தடையையும் மீறி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடியுடன் மலைக்கோவிலில் குவிந்தனர்.

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் நடைபெறும் திருவிழாக்களிலேயே தைப்பூசம் முதன்மையானதாகும். இந்த விழாவின் போது பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பழனி முருகனை வழிபட்டு செல்வார்கள்.

அவ்வாறு வரும் பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்தியும் பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துவது வழக்கம். இந்த வருட திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6ம் நாள் திருவிழாவாக நேற்று இரவு பெரியநாயகி அம்மன் கோவிலில் நடந்தது. வள்ளிதெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு பால், பஞ்சாமிர்தம், பழங்கள் விபூதி, உள்ளிட்ட 16 வகை பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டு வஸ்திரம், நகைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது.

வழக்கமாக திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோ‌ஷம் முழங்க முருகனை வழிபடுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் மற்றும் பங்கேற்ற திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெள்ளித் தேரில் 4 ரத வீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் நேற்று கொரோனா பரவல் காரணமாக வெள்ளி மயில் வாகனத்தில் தம்பதி சமேதராக முத்துக்குமார சுவாமி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் இன்று மாலை பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் இன்றி நடைபெறுகிறது. இதற்காக சிறிய அளவிலான தேரில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து தேரோட்டமும் நடத்தப்படுகிறது. முன்னதாக இன்று காலை 5 மணிக்கு தீர்த்தம் தரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பகல் 12.40 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 4.45 மணிக்கு கோவில் வளாகத்துக்குள் சுவாமி வீதிஉலா எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தைப்பூச தேரோட்டத்தில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் கடந்த சில நாட்களாகவே பாத யாத்திரையாக பழனி நோக்கி பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். காரைக்குடியில் இருந்து வந்த நகரத்தார் குழுவினர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாதயாத்திரை பக்தர்கள் பழனியில் குவிந்தனர். இவர்கள் கிரி வீதிகளில் காவடியுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

மேலும் அடிவாரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் ஏராளமான பக்தர்கள் தங்கியுள்ளனர். தைப்பூச நாளான இன்று மலையடிவாரத்தில் சாரைசாரையாக பக்தர்கள் திரண்டனர். பாதவிநாயகர் கோவிலில் வழிபட்டு அங்கிருந்தவாறே பழனி முருகனை பார்வை செய்து மனமுருக வேண்டிக் கொண்டனர். மேலும் கிரி வீதிகளிலும் சுற்றி வந்து வழிபட்டனர்.

தைப்பூசத் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட போதிலும் பழனியில் குவிந்துள்ள பக்தர்கள் அரோகரா கோ‌ஷம் முழங்க அடிவாரத்தில் இருந்தபடியே சூடம் ஏற்றியும், தீபம் ஏற்றியும் வழிபட்டுச் சென்றனர்.

இதையும் படிக்கலாம்….ஆசைகளை நிறைவேற்றும் தைப்பூச விரதம்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »