Press "Enter" to skip to content

அபுதாபி பயங்கரவாத தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உயிரிழப்புக்கு ஐ.நா.சபை கண்டனம்

பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வெளிப்பட்டாலும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அது மிக பெரிய அச்சுறுத்தலாகும் என்றும் ஐ.நா.சபை குறிப்பிட்டுள்ளது.

நியூயார்க் :

அபுதாபியில் கடந்த 17ம் தேதியன்று கல்லெண்ணெய் டேங்கர்கள் மீது  ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் வாயிலாக குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரண்டு இந்தியர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர்; ஆறு பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஹவுதி பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அபுதாபி பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.  உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.  இது தொடர்பாக ஐ.நா. சபை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அபுதாபியிலும், சவுதி அரேபியாவின் பிற பகுதிகளிலும்  நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கது. 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகளுக்கும் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.  மேலும் காயமடைந்தவர்கள் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய விரும்புகிறோம்.  பயங்கரவாதம் எந்த வடிவங்களிலும் வெளிப்பட்டாலும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அது மிக கடுமையான அச்சுறுத்தலாகும் என்பதை ஐ.நா.கவுன்சில் உறுப்பினர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். இவ்வாறு அந்த அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் ஐ.நாவுக்கான இந்தியா தூதர் டி.எஸ்.திருமூர்த்தி தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இரண்டு இந்தியர்கள் உயிரிழந்த இந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான எங்களது கூட்டு விருப்பத்தை  ஐ.நா.சபை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார். இந்த பயங்கரவாத தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »