Press "Enter" to skip to content

கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலங்கள் மே 31-ந்தேதி வரை, கொள்முதலைத் தொடர மத்திய அரசு அனுமதி

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கோதுமையின் அளவு கடந்த 2 மாதங்களாக அதிகரித்ததால் இந்தியாவில் கோதுமை விலை நாளுக்கு நாள் உயர்ந்தபடி உள்ளது. 

இதனை கட்டுப்படுத்தும் வகையில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது. 

மத்திய அரசு போதுமான அளவு கோதுமையை கொள்முதல் செய்ய தவறியதே இதற்கான காரணம் என்றும், சரியான அளவில் கொள்முதல் நடந்திருந்தால், கோதுமை ஏற்றுமதியை தடை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்றும்,  காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார்

இந்நிலையில், கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்  மே 31-ந்தேதி வரை , கொள்முதலைத் தொடருமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 

இந்த நீட்டிக்கப்பட்ட காலம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இது தொடர்பாக மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் விடுத்த கோரிக்கைகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர்,  குஜராத், பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 2022-23 ஆண்டுக்கான ரபி சந்தை பருவத்தில், மத்திய தொகுப்பின் கீழ் கோதுமை கொள்முதல் சீராக நடந்து வருகிறது என்று மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய பருவத்துடன் ஒப்பிடுகையில், மத்திய தொகுப்பின் கீழ் கோதுமை கொள்முதல் குறைவாக உள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14.05.2022 வரை, 180 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் சுமார் 16.83 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »