Press "Enter" to skip to content

அண்டை மாநிலங்களுக்கு செல்லும் அரசு பேருந்து கட்டண உயர்வு பட்டியல் தயார்- அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

பேருந்துகளில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் துங்கபுரம், வலயப்பாடி, வேப்பூர் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், புதிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பேருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு பொய்யான தகவல் பரவி வருகிறது. அதாவது பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. எனவே அந்த மாநிலத்திற்கும், நமது மாநிலத்திற்கும் இடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கு கட்டணத்தை உயர்த்தப்பட வேண்டும் என்பது சட்டரீதியான நடவடிக்கைகளில் ஒன்று.

அந்த அடிப்படையில் ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது. அதற்கேற்றவாறு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ஒப்பீடு செய்து கட்டண உயர்வு குறித்த பட்டியலை தயார் செய்து அளித்து இருக்கிறார்கள். அது தயார் நிலையில் உள்ளது.

அதனைக்கொண்டு தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக பலர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் எங்களுக்கு இதுவரை எந்த ஒரு அறிவுரையும் வழங்கவில்லை.

டீசல் விலை ஒவ்வொரு நாளும் ஒன்றிய அரசினால் தினந்தோறும் உயர்த்தப்பட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் நம்முடைய மாநில முதல்-அமைச்சர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் பஸ்களை இயக்க எங்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் தொலைதூரமான அண்டை மாநிலங்களில் பஸ் கட்டணம் எந்த அளவில் உயர்த்தப்பட்டு உள்ளதோ அதே அளவில் நாமும் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற ஒப்பந்த அடிப்படையில் அந்த மாநிலங்களுக்கு இயக்கப்படும் விரைவு பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படும். அதன்படி தான் அதிகாரிகள் கட்டண உயர்வு பட்டியலை தயார் செய்து கொடுத்துள்ளனர்.

14வது ஊதிய குழு பேச்சுவார்த்தை கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறவில்லை. தற்போது முதல்வர் தலைமையில் அந்த கூட்டம் நடைபெற்றது. வருகிற மழைக்காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் பேருந்துகள் சீரமைக்கப்படும்.

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவாகவே உள்ளது. கேரளா, தமிழ்நாடு செய்துகொண்ட ஒப்பந்தங்களின்படி அந்த பேருந்துகளில் மட்டுமே பேருந்து கட்டணம் உயர்வு குறித்து அதிகாரிகள் அறிக்கை அளித்துள்ளனர்.

போக்குவரத்து துறை ரூ.48,500 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை சீரழிக்கப்பட்டது. அதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

பேருந்துகளில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. 2000 புதிய பேருந்துகளும், 500 மின்கலவடுக்கு (பேட்டரி) பேருந்துகளும் ஜெர்மனியில் இருந்து வாங்கப்பட உள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »