Press "Enter" to skip to content

சென்னையில் அதிரடி சோதனை- தலைக்கவசம் அணியாத 3926 பேர் மீது வழக்கு

அனைத்து வாகன ஓட்டிகளும் தலைக்கவசம் விதியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர், சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக  சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சிறப்பு வாகன தணிக்கைகளை நடத்தி வாகன விதி மீறுபவர்களை கண்காணித்தும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதை மேம்படுத்துவதற்காகவும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரின் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (23.05.2022) சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது. தலைக்கவசம் அணியாததற்காக 1,903 மோட்டார் மிதிவண்டி ஓட்டுநர்கள் மீதும், 2,023 வழக்குகள் பின்னிருக்கை பயணிகள் மீதும் பதியப்பட்டுள்ளது. 

எனவே, அனைத்து வாகன ஓட்டிகளும் தலைக்கவசம் விதியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என எச்சரிக்கப்படுகிறது.  தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சிறப்பு தணிக்கை மேலும் தொடரும்.

அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்கவும், விபத்தில்லா நகரை அடையவும் சென்னை காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »