Press "Enter" to skip to content

இந்த வருஷம் 5 ஆல்பம் வெளியிட போறேன் – சந்தோஷ் நாராயணன்

‘இசை, வாழ்வின் ரகசியம் திறக்கும் மொழி. வார்த்தைகளால் உணர்வை தொட முடியாதபோது, இசை அந்த மாயத்தை ஒரு நொடியில் நிகழ்த்திக் காட்டி விடுகிறது. இசையின் சக்தியை, இசை அறியும். அந்த இசையை குழைத்து ரசிகர்களின் காதுகளுக்குள் பாடலாகக் கொண்டு வரும் இசை அமைப்பாளர்கள் அதில் முக்கியமானவர்கள். சந்தோஷ் நாராயணன் அந்த மாயத்தை இயல்பாகச் செய்யும் இசை அமைப்பாளர். அவருடைய ஒவ்வொரு பாடலும் ஏதோ ஒரு ரகசியத்தை, மகிழ்ச்சியை, காதலை மனதுக்குள் செலுத்திவிட்டுப் போகிறது. திரைப்படத்தில் 10 வருடங்களை நிறைவைச் செய்திருக்கும் அவரிடம் பேசினோம்.

‘அட்டகத்தி’ மூலம் திரைப்படத்திற்கு வந்தீங்க. 10 வருஷமாச்சு. இப்போ திரும்பிப் பார்த்தா எப்படியிருக்கு?

இந்த வளர்ச்சி நான் எதிர்பார்க்காததுதான். ஒரு படம், ரெண்டுபடம் பண்ணுவோம்னுதான் நினைச்சேன். அதைத் தாண்டி வந்திருக்கேன். என்னோட இந்த உயரத்துக்காக மக்களுக்குத்தான் நன்றி சொல்லணும். அவங்க ஆதரவுதான் என்னை இந்த இடத்துக்குக் கொண்டு வந்திருக்கு. மகிழ்ச்சியா இருக்கேன்.

கானா, மெலடி, துள்ளல் எதுவாகயிருந்தாலும் இது சந்தோஷ் நாராயணன் பாட்டுதான்னு அடிச்சு சொல்ற அளவுக்கு, உங்கப் பாடல்கள் தனித்துவமா இருக்கே… எப்படி?

பொதுவா எல்லா படைப்புகளுமே நம்ம கதாபாத்திரம்கள்ல இருந்துதான் வரும். என் பாடல்களும் அப்படித்தான்னு நினைக்கிறேன். ஒரு பாடல், எந்த உணர்வை வெளிப்படுத்தணுமோ, அதைச் சரியா செய்யணும்னு நினைப்பேன். அதுக்காக நிறைய மெனக்கெடுவேன். உற்சாகமானத் துள்ளல் பாடல் பண்ணும்போது அதுக்கான மரியாதையை கொடுக்கணும், எமோஷனலான பாடல் பண்ணும்போது அதுக்கான விஷயங்களைச் சரியா தக்க வைக்கணும்னு ஆசைப்படுவேன். அதுல கறாராகவும் இருப்பேன்.

நாட்டுப்புற பாடல்கள்தான் எல்லா பாடல்களுக்கும் தாய்னு சொல்வாங்க..

எனக்கு நிறைய இன்ஸ்பிரேஷன்ஸ் இருக்கு. இந்த மாதிரிதான் பண்ணணும் அப்படிங்கற எண்ணம்லாம் இல்லை. நிறைய இசை கேட்பேன். அப்படித்தான் நாட்டுப்புற இசையையும் கேட்பேன். அதுல சில பொதுவான விஷயங்களை கண்டுபிடிச்சு, இன்ஸ்பயராகி பாடல்கள் பண்ணியிருக்கேன்.

பாடல்கள் எழுத இலக்கணம் தெரியணுமா? ‘அரை மாத்திரை தவறினாலும் பாடல் சத்தம் மாறிரும், அதே போல, குறில், நெடில் சரியா மீட்டர்ல உட்காரணும்’னு சொல்றாங்களே…

முதல்ல , பாடலுக்கு மொழி அறிவு வேணும். இலக்கணம் எதுவும் தெரியாம சூப்பரான பாடல்கள் பண்ணினவங்களும் இருக்காங்க. அரை மாத்திரைகள்ல கூட உணர்வுகள் மாறும் சூழல் இருக்கு. அது முக்கியம்தான். அது இல்லாமலும் பண்ணலாம். முதல்ல வண்டி ஓட்ட கத்துக்கிறோம். பிறகுதொலைபேசி பேசிட்டே கூட வண்டி ஓட்டறோம் இல்லையா? அது மாதிரிதான் இதுவும். நான் இதுல அதிகமாகவே கவனம் செலுத்துவேன்.

உங்களோட ‘எஞ்சாமி’ தனியிசைப் பாடலுக்கு செம ‘ரெஸ்பான்ஸ்’. தனியிசையில அதிக வரவேற்பைப் பெற்ற தமிழ்ப் பாடலா அதை சொல்லலாம். இப்ப இது போன்ற பாடல்கள் அதிகமாயிருக்கா?

கண்டிப்பா. ஆனா, இது காணாது. இன்னும் நிறைய வரணும். சுயாதீன இசை எல்லா கலாச்சாரத்துக்கும் தேவையான ஒன்னு. திரைப்படத்துக்குப் பண்ணும்போது, அதுக்கான அளவு வேற. சில விஷயங்களை மட்டும்தான் அதுல பேச முடியும். கதாபாத்திரங்களுக்கான உணர்வைதான் சொல்ல முடியும். அதுக்கு வரையறை இருக்கு. சுயாதீன இசைகளுக்கு அப்படி ஏதும் இல்லை. அதுக்கான இடம் பெரிசு. அதனால இன்னும் நிறைய வரணும்னு ஆசைப்படறேன்.

‘எஞ்சாமி’க்குப் பிறகு அடுத்து ஆல்பம் பண்ணலையா?

இந்த வருஷம், நாலஞ்சு ஆல்பம் வெளியீடு பண்ணப் போறேன். சர்வதேச அளவுல சில பேரோட இணைஞ்சு, அதை வெளியிடலாம்னு இருக்கிறேன். என் தேடல் சுயாதீன இசையிலயும் தொடர்ந்து இருந்துட்டேதான் இருக்கு. இப்ப, கார்த்திக் சுப்புராஜோட, ‘ஜிகிர்தண்டா 2’, மாரி செல்வராஜின் ‘வாழை’ படங்கள் பண்ணிட்டு இருக்கேன். என் மற்ற படப் பாடல்களை மாதிரி, இதோட பாடல்களும் கண்டிப்பா ரசிகர்களுக்கு பிடிக்கும்

இன்றைய காலக்கட்டத்துல அதிகமான இசை அமைப்பாளர்கள் வர்றாங்க…

இப்ப வர்றவங்க அதிக பயிற்சியோட, திறமையோட வர்றாங்க. ஆனா, புதுசா வர்றவங்களுக்கு வாய்ப்பு சீக்கிரம் கிடைச்சிடறதில்லை. நாங்க அந்த விஷயத்துல கொஞ்சம் லக்கிதான். ஏன்னா, அப்ப நாங்கள் பண்ணின சில நல்ல படங்கள், தொடர்ந்து வரவேற்பைப் பெற்றது. மக்கள் கவனிக்க ஆரம்பிச்சாங்க. கரோனாவுக்கு பிறகு சின்ன படங்கள் வெற்றி பெறுவது ரொம்ப கஷ்டமாயிடுச்சு. புது டீமா வந்து, திரைப்படம்வுல ஜெயிக்கறது அஞ்சாறு வருஷமா குறைஞ்சிருக்குன்னு நினைக்கிறேன். இன்னும் புது டீம் வந்தாங்கன்னா, எல்லாருக்குமே நல்ல எனர்ஜி கிடைக்கும்னு நினைக்கிறேன்.

சுயாதீன இசைக்காக தனி ஸ்டூடியோ ஆரம்பிக்கப் போறதா சொல்லி இருந்தீங்களே?

ஆமா. அந்த பிரம்மாண்டமான ஸ்டூடியோ உருவாகிட்டு இருக்கு. சுயாதீன கலைஞர்களுக்கு இலவசமா இந்த ஸ்டூடியோவை கொடுக்க இருக்கிறேன். அதுக்கு நல்ல தமிழ்ப் பெயரைத் தேடறேன்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »