Press "Enter" to skip to content

காஷ்மீர் நிலநடுக்கம்: “பாதுகாப்பாக இருக்கிறோம்” – விஜய்யின் ‘லியோ’ படக்குழு அறிவிப்பு

காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து ‘‘பாதுகாப்பாக இருக்கிறோம்” என விஜய்யின் ‘லியோ’ படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம், ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உட்பட பலர் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தி நடிகர் சஞ்சய் தத் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘கே.ஜி.எஃப் 2’ படம் மூலம் தென்னிந்தியாவிலும் அறிமுகமாகி இருக்கும் சஞ்சய் தத், இதில் முதன்மை பகைவன் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். இதனிடையே, நேற்று டெல்லி, உ.பி, பஞ்சாப், ஹரியானா மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் நிலஅதிர்வு உணரப்பட்டது.

இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர். இந்த நிலையில் தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கும் ‘லியோ’ படக்குழு அங்கு தங்களின் தற்போதைய நிலை குறித்த அப்டேட்டை கொடுத்திருக்கிறது. இது குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சந்திரமுகி படத்தில் பங்களாவிற்குள் செல்லும் வடிவேலு பயந்து நடுங்கும் காணொளியை பகிர்ந்து ‘நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் நண்பா’ என்று பதிவிட்டு இருக்கிறது. மேலும் படத்தில் லோகேஷ்கனகராஜூடன் இணைந்து திரைக்கதை மற்றும் வசனத்தில் கவனம் செலுத்தும் ரத்னகுமார், ‘BLOOODY நிலநடுக்கம்’ என்று பதிவிட்டு இருக்கிறார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »