Press "Enter" to skip to content

“திரையுலகில் மூவருமே பணியாற்றிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி” – தங்கர் பச்சான்

39 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்திற்காக பாடலாசிரியர் வைரமுத்துவும், பாடகர் சித்ராவும் இணைந்துள்ள நிலையில், “மூவரும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி” என படத்தின் இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் தங்கர் பச்சான் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கும் படம் “கருமேகங்கள் கலைகின்றன”. பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகிபாபு ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். ஒளிப்பதிவு என்.கே ஏகாம்பரமும், படத்தொகுப்பை பி.லெனினும் மேற்கொள்கின்றனர். படத்தினை டி. துரை வீரசக்தி தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்து, படத்தின் முதல் பார்வைகை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார்.

விரைவில் திரைக்கு வர உள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்திற்காக 39 ஆண்டுகளுக்குப்பிறகு பாடலாசிரியர் வைரமுத்து எழுதிய பாடலை பாடகர் சித்ரா பாடியுள்ளார். இதற்கு முன்னதாக ‘நீதானா அந்த குயில்’ படத்தில் வைரமுத்து எழுதிய ‘பூஜைக் கேத்த பூவிது’ பாடலை சித்ரா பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக படத்தின் இயக்குநர் தங்கர் பச்சான் குறிப்பிடும்போது, “நான் ஒளிப்பதிவாளனாக அறிமுகமாகிய (மலைச்சாரல்-1990) திரைப்படத்தில் வைரமுத்து பாடல்களை எழுதினார். அப்படத்தில் பாடகி சித்ராவும் பாடினார். எனது இயக்கத்தில் உருவாகி வரும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்திலும் மூவருமே இணைந்து பணியாற்றுகின்றோம். தொடர்ந்து திரைக்கலையுலகில் மூவருமே பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது” என தெரிவித்துள்ளார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »