Press "Enter" to skip to content

நடிகை யாஷிகா ஆனந்த் மீது பிறப்பித்த பிடிவாரன்ட் தளர்வு: ஏப்.25-ல் மீண்டும் ஆஜராக உத்தரவு

செங்கல்பட்டு: நடிகை யாஷிகா ஆனந்த் மீது போடப்பட்ட பிடிவாரன்ட் தளர்த்தப்பட்டு, ஏப். 25-ம் தேதி நீதிமன்றத்தில் அவர் மீண்டும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நடிகை யாஷிகா ஆனந்த். கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 21-ம்தேதி அவரது மூன்று நண்பர்களுடன் புதுச்சேரி சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பி உள்ளார்.

அப்போது வரும் வழியில் மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு பகுதியில் அவரது தேர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகாவின் நெருங்கிய தோழியான ஹைதராபாத்தை சேர்ந்த வள்ளி பவானி செட்டி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் யாஷிகா மற்றும் அவரது இரு ஆண் நண்பர்கள் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக மாமல்லபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் வாய்தா கடந்த மார்ச் 21-ம் தேதி வந்தபோது யாஷிகா ஆஜராகவில்லை. இதனால் கடந்த 23-ம் தேதி அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜரானார். அப்போது விசாரணை நடத்திய நீதிபதி, “ஏன் கடந்த 21-ம் தேதி ஆஜராகவில்லை” என கேட்டபோது, “உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆஜராக முடியவில்லை” என கூறினார்.

தொடர்ந்து அவரை வரும் ஏப். 25-ம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா உத்தரவிட்டார். இதனால் அவர்மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்ட் தளர்த்தப்பட்டுள்ளது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »