Press "Enter" to skip to content

மதுரை சிறை நூலகத்துக்கு 1,000 புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

மதுரை: மதுரை மத்திய சிறை நூலகத்துக்காக நடிகர் விஜய் சேதுபதி 1,000 புத்தகங்களை நன்கொடையாக டிஐஜி பழனியிடம் வழங்கினார்.

சென்னை புழல் மத்திய சிறையைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையிலும் கைதிகள் பயன்பெறும் வகையில், சிறப்பு நூலகத் திட்டம் சில மாத்திற்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. இதற்காக சிறைத்துறை டிஐஜி பழனி, கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தக் கண்ணன் உள்ளிட்டோர் பல்வேறு வகையான புத்தகங்களை சேகரிக்கின்றனர். ஈரோடு சமூக ஆர்வலர் ஜானகி 1000 புத்தகமும், மதுரை கூடல்புதூர் பகுதி வயது முதிர்ந்த நெசவுத் தொழிலாளி பாலகிருஷ்ணன் 300 புத்தகங்களும் வழங்கினர்.

தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் நன்கொடையாக புத்தகங்கள் பெறுகின்றனர். இதுவரை மத்திய சிறை நூலகத்திற்கென 15 ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் சேகரிக்கப்பட்டுள்ளன. கிளை சிறைகள் மூலமாகவும் சேகரிக்கின்றனர். மதுரை, பாளையங்கோட்டை சிறைக்கென தலா 1 லட்சம் புத்தகங்கள் சேகரிக்க, சிறை நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. சிறை நூலகம் மூலம் தினமும் கைதிகளுக்கு நூல்கள் வழங்கப்பட்டு, வாசிக்க உதவுகின்றனர்.

இந்நிலையில், திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி மதுரை மத்திய சிறை கைதிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகை புத்தகங்களை நன்கொடையாக வழங்க திட்டமிட்டார். இதையொட்டி சுமார் 1000 புத்தகங்களுடன் மதுரை மத்திய சிறை வளாகத்திற்கு வந்தார். சிறை டிஐஜி பழனி, கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தக்கண்ணன் ஆகியோரை சந்தித்து புத்தகங்களையும் வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘சிறைக் கைதிகளை புத்தகங்கள் மூலம் நல்வழிப்படுத்தும் முயற்சியை பாராட்டுகிறேன். இது பற்றி கேள்விப்பட்டதும் நிறைய புத்தகங்களை வழங்கவேண்டும் எனக் கருதினேன். தற்போது, உசிலம்பட்டி பகுதியில் திரைப்படம் படப்பிடிப்பில் இருப்பதால் முதல் கட்டமாக 1000 புத்தகங்களை வழங்குகிறேன். இலக்கியம், கிராமத்து பின்னணி, கைதிகளை நல்வழிப்படுத்தும் போதனை உள்ளிட்ட பல்வேறு விதமான புத்தகங்களை வழங்கியுள்ளேன். சிறைத் துறை அதிகாரிகளின் இந்த முயற்சிக்கு பாராட்டு. இத்திட்டம் வெற்றி பெறவேண்டும்’ என்றார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »