Press "Enter" to skip to content

“கலைகள் அனைவருக்கும் சொந்தம்” – ரோகிணி திரையரங்கம் சம்பவம் குறித்து ஜி.வி.பிரகாஷ்

சென்னையில் ‘பத்து தல’ படம் பார்க்க வந்த நரிக்குறவர் மக்களை ரோகிணி தியேட்டருக்குள் முதலில் அனுமதிக்க மறுத்த விவகாரத்தில் “கலை அனைவருக்குமானது” எனக் கூறி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் ‘பத்து தல’ திரைப்படம் இன்று (மார்ச் 30) தமிழகம் முழுவதும் வெளியானது. படத்தைப் பார்ப்பதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்குக்கு நரிக்குறவர் இன மக்கள் வந்தனர். அப்போது அவர்கள் கையில் அனுமதிச்சீட்டு வைத்திருந்தும் அவர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான காணொளி காட்சியும் வெளியானது.

இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திரையரங்கு நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘பத்து தல’ படம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால் அவர்கள் குழந்தைகளுடன் வந்ததால் முதலில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், பிறகு அவர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்” என்று விளக்கம் அளித்துள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இச்சம்பவத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது. எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது” என பதிவிட்டுள்ளார்..

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »