Press "Enter" to skip to content

ஆருத்ரா மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே.சுரேஷ் சம்மனுக்கு தடை விதிக்க உயர்நீதிநீதி மன்றம் மறுப்பு

சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்த வழக்கில் காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதுவரை சம்மனுக்கு தடை விதிக்க வேண்டுமென்ற ஆர்.கே.சுரேஷின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக்கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பு உள்ளது தெரியவந்தது. அதனடிப்படையில் காவல் துறை விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக ஆர்.கே.சுரேசுக்கு பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், படத் தயாரிப்பு தொடர்பாகவே ரூசோ தம்மை அணுகினார். அதுதொடர்பாக மட்டுமே பணப் பரிவர்த்தனை நடந்தது. தனது மனைவி மற்றும் குழந்தையை கவனித்து கொள்வதற்காக வெளிநாட்டில் இருப்பதால், விசாரணைக்கு நேரடியாக ஆஜராக முடியவில்லை என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆர்.கே.சுரேஷ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜராகி, “அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த விவகாரத்தில் மனுதாரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருக்கும் ஆருத்ரா நிறுவன மோசடிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஆவணங்களுடன் ஆஜராக அனுப்பியுள்ள சம்மனில், எந்த மாதிரியான ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்கள் இல்லை. எனவே, சம்மனை ரத்து செய்யப் போவதாகவும், வேண்டுமானால் தேவையான விவரங்களுடன் புதிய சம்மனை அனுப்புமாறு காவல்துறையிடம் தெரிவித்தார்.

அப்போது,காவல் துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, சம்மனை ரத்து செய்ய வேண்டாம். இந்த அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பபட்டது குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். காவல்துறை பதிலளிக்கும்வரை சம்மனுக்கு தடை விதிக்க வேண்டுமென ஆர்.கே.சுரேஷ் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, காவல் துறை பதிலளிக்க அவகாசம் வழங்கி வழக்கை ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »