Press "Enter" to skip to content

தெய்வ மச்சான்: திரை விமர்சனம்

அமைதியான அப்பா பரந்தாமன் (பாண்டியராஜன்), பஞ்சாயத்தில் பணியாற்றும் அண்ணன், திருமணத்துக்குக் காத்திருக்கும் தங்கை குங்குமத்தேன் (அனிதா சம்பத்), குடும்பத்தில் ஒருவனான நண்பன் முருகன் (பாலசரவணன்) என ‘தபால்’ கார்த்திக்கிற்கு (விமல்) அழகான வாழ்க்கை. அவர் கனவில் அடிக்கடி வந்து ‘அவன் செத்துருவான், இவன் செத்துருவான்’ என்று மிரட்டிவிட்டுப் போகிறார், குதிரையில் வரும் சாட்டைக்காரர் (வேல ராமமூர்த்தி). அவர் சொல்வதெல்லாம் அப்படியே நடந்தும் விடுகிறது. இந்நிலையில், தங்கைக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்கும் தருவாயில், அவர் கணவர், மச்சான் இறந்துவிடுவார் என்று சாட்டைக்காரர் கூற, அதிர்ச்சி அடையும் கார்த்தி, அதைத் தடுக்க என்ன செய்கிறார்? சாட்டைக்காரர் சொன்னது பலித்ததா? என்பதை நகைச்சுவையுடன் சொல்கிறது ‘தெய்வ மச்சான்’.

சிற்சில குறைகள் இருந்தாலும் ‘ரூரல் நகைச்சுவை’ கதைக்கான திரைக்கதையை இயல்பாக அமைத்திருக்கிறார் இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார். நகைச்சுவை மீட்டரில் இருந்து சில காட்சிகள், அவ்வப்போது நழுவி ‘நகைச்சுவை பஞ்சத்’தையும் நாடகத் தன்மையையும் ஏற்படுத்தினாலும் அதற்கடுத்தடுத்து வரும் காட்சிகள், குபீர் சிரிப்பைக் கொப்பளிக்க வைத்து அதை மறக்கடித்து விடுகின்றன.

‘தங்கச்சி மாப்பிள்ளை, மச்சான்’ என்கிற வார்த்தை விளையாட்டின் வழி நடக்கும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டும் அதன்பின் வரும் நகைச்சுவை களேபரங்களும் ‘பழைய வாடை’ அடித்தாலும் இயக்குநரின் புத்திசாலித்தனமான எழுத்தின் வெற்றி. அதற்கு, ‘விலங்கு’க்குப் பிறகு விமல், பாலசரவணனின் வில்லேஜ் காம்பினேஷனும் அழகாகப் பொருந்தி இருக்கிறது.

தங்கை கேரக்டருக்கு இயல்பாக இருக்கிறார் அனிதா சம்பத். அறிமுகம் என்று சொல்ல முடியாதபடி சிறந்த நடிப்பால் கவர்கிறார். நாயகி நேகாவுக்கு அதிக வேலையில்லை. ஏடாகூடமாகப் பேசிவிட்டு, ஒவ்வொரு முறையும் வீட்டில் இருந்து மூட்டைக்கட்டிச் செல்லும் அத்தை தீபா கவனிக்க வைக்கிறார். எப்போதும் போதையில் இருக்கும் அவர் கணவர் கிச்சா ரவி, தங்கை மாப்பிள்ளை வத்சன் வீரமணி, வெள்ளைக்குதிரையில் வந்து நிற்கும் வேல ராமமூர்த்தி, சில காட்சிகளே வரும் ஜமீன், ‘ஆடுகளம்’ நரேன் என அனைவரும் தங்கள் பாத்திரங்களில் பொருந்திப் போகிறார்கள்.

கேமில் ஜே அலெக்ஸின் ஒளிப்பதிவும் அஜீஸின் பின்னணி இசையும் நகைச்சுவை கதைக்குத் தேவையானதை செய்திருக்கிறது. படத் தொகுப்பாளர் இளையராஜா சில இடங்களில் கருணையின்றி கத்திரி போட்டிருக்கலாம்.

தனது குறும்படத்தையே முழு திரைப்படமாக்கி இருக்கிறார் இயக்குநர். அதற்காக ‘இழுத்து’ வைத்திருக்கிற சில காட்சிகள் திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது. அதிலும் முதல் பாதியில் மெதுவாக நகரும் காட்சிகளிலும் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் நன்றாகச் சிரித்திருக்க முடியும்.

– விமர்சனம்

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »