Press "Enter" to skip to content

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது – திருமா காளைக்கு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பரிசு

தைத்திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு தென் தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில், குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடி, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

தைத்திருநாளான இன்று (ஜன. 15) அவனியாபுரத்திலும், நாளை (ஜன.16), பாலமேட்டிலும் நாளை மறுநாள் (ஜன. 17) உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த மூன்று நாளும் மதுரையே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது

மதுரை அவனியாபுரத்தில் 3 ஆண்டுகளாகவே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் ஒருங்கிணைப்புக் குழுவில் அனைத்து சாதியினரும் இடம்பெறுவது தொடர்பான பிரச்னை நீதிமன்ற படியேற நேரிட்டது. இதில் தீர்வு எட்டப்படாததால், நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகமே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி வருகிறது.

அதற்கு இந்த ஆண்டும் விதிவிலக்கு இல்லை. அவனியாபுரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், கடந்தாண்டைப் போல இந்தாண்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இல்லாத நபர்கள் ஏதேனும் இடையூறுகள் ஏற்படுத்தினால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் பதிவு 2 நாட்களாக நடைபெற்றது. அதன் முடிவில், ஆயிரம் காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் களமிறங்க டோக்கன்கள் வழங்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் ஜல்லிகட்டு உறுதி மொழி ஏற்க, அமைச்சர் மூர்த்தி போட்டிகளை கொடியசைத்து போட்டி துவங்கி வைத்தார். முதல் சுற்றில் 50 பேர் களமிறங்கினர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

திருமா காளைக்கு பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பரிசு

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சார்பாக காளை ஒன்று களமிறக்கப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறி வந்த அந்த காளையை எந்தவொரு மாடுபிடி வீரராலும் பிடிக்க முடியவில்லை.

பிடிபடாத அந்த காளைக்கு அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தங்கக்காசு பரிசளித்தார்.

ஜல்லிக்கட்டு களத்திற்குள் புகுந்த நாய்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மூன்றாவது சுற்று விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று திடீரென களத்திற்குள் புகுந்துவிட்டது. வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்க்கப்பட்டுக் கொண்டிருந்த போதே, அந்த காளைகள் ஓடிச் செல்லும் பாதையில் அந்த நாய் படுத்துக் கொண்டது. ஆனாலும், ஜல்லிக்கட்டு எந்தவொரு தடங்கலும் இன்றி தொடர்ந்தது.

காளைகள் வாடிவாசலில் இருந்து சீறி வந்த போதும் அந்த நாய் அசராமல் களத்திலேயே படுத்திருந்தது. சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகே அந்த நாய் அங்கிருந்து எழுந்து சென்றது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

கடந்த ஆண்டு முதல் பரிசு வென்ற கார்த்திக் காயம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இதுவரை காவல்துறை சார்பு ஆய்வாளர் மற்றும் பார்வையாளர் ஒருவர் உட்பட மொத்தம் 28 பேர் காயமடைந்துள்ளனர். 5 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 15 காளைகளை அடக்கி முதல் இடம் பிடித்த அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இளைஞருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர்.

முதலமைச்சர், உதயநிதி சார்பில் 2 கார்கள் பரிசு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த மாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் சார்பில் தேர் பரிசாக அளிக்கப்படவுள்ளது.

மேலும், அமைச்சர் மூர்த்தி மாடுகளை பிடித்த வீரர்கள் மற்றும் பிடிபடாத மாடுகளுக்கு தங்கக்காசு பரிசளித்தார்.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம், Getty Images

ஜல்லிக்கட்டு விழா குழுயினர் கூறும் விதிமுறைகள் என்ன?

ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்பாக மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்த பின்பே களத்திற்குள் இறங்க அனுமதிக்கப்படுவர்.

அரசு வழங்கிய டோக்கன்கள் உள்ள ஜல்லிக்கட்டு காளைகள் மட்டுமே களத்திற்குள் அவிழ்க்க அனுமதிக்கப்படும்.

அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின் படி ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்பையோ, வாலையோ பிடிக்கக்கூடாது. பிடித்தால் வீரருக்கு எச்சரிக்கை அளிக்கப்படும், அதனையும் மீறி அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அந்த வீரர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளை வெற்றி பெற்றதா அல்லது மாடுபிடி வீரர் வெற்றி பெற்றாரா என்பது குறித்து குழுயினர் தான் முடிவு செய்வார்கள், அதேபோல், நீதிமன்றம் அறிவித்துள்ள சாதிப் பெயர்களை குறிப்பிடுவது கிடையாது என்கிறார், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குழுயைச் சேர்ந்த கோவிந்தராஜன்.

சாதி பெயர் குறிப்பிடப்படாது

மதுரையை சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவின் பேரில், ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகளை அதன் உரிமையாளரின் சாதி பெயரை குறிப்பிட்டு அவிழ்க்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை பரிசீலனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை அமைச்சர் மூர்த்தியும் உறுதி செய்தார். அவனியாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஜல்லிக்கட்டு போட்டியில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சாதிப்பெயர் குறிப்பிடப்படாமல் காளையின் பெயர், ஊர் பெயர் மட்டுமே குறிப்பிடப்படும். “, என்று அவர் கூறினார்.

ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம், Getty Images

ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம், Getty Images

காவல்துறை அறிவிப்புகள் என்ன?

ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம், Getty Images

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகம் அளித்த அனுமதிச் சீட்டுகளுடன் வந்தால் மட்டுமே அனுமதி.

காளைகளுடன் வரும் உரிமையாளரும் மற்றும் உதவியாளரும் மதுபோதையில் இருக்கக்கூடாது.

காளைகளின் உரிமையாளர்கள் மாட்டின் மூக்கணாங்கயிறை அறுப்பதற்காக கத்தியோ அல்லது கூர்மையான ஆயுதங்களோ கொண்டுவரக்கூடாது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க மதுரை மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட மாடுபிடி வீரர்கள் புகைப்படம் உள்ள அனுமதி சீட்டு மற்றும் உரிய மருத்துவ தகுதிச்சான்றும் கொண்டு வரவேண்டும்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் எக்காரணத்தைக் கொண்டும் மதுபோதையில் இருக்கக் கூடாது. மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜல்லிக்கட்டு வாடிவாசல் முன்புறம் மற்றும் அருகில் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் குடியிருக்கும் குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு எந்த நபர்களையும் வீட்டில் இருந்தோ அல்லது மேல் மாடியில் இருந்தோ ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க அனுமதித்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் வீட்டின் உரிமையாளர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுமதி பெற்ற காளைகள் மற்றும் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளையும் மீறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்து இருக்கிறது.

”காளையை களத்தில் சந்திக்க தயார்”

”கடந்தாண்டில் நடைபெற்ற பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்றேன். இதில், அலங்காநல்லூர், சத்திரக்குடி ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டு தேர் மற்றும் இருசக்கர வாகனம் என பல்வேறு பரிசுபொருட்களை வென்றேன். இந்த ஆண்டும் அதேபோல ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று சிறந்த வீரராக விளங்க வேண்டும் என்பதற்காக கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன்” என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் சிவகங்கை மாவட்டம் ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவன் எனது கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த போட்டிகளில் பங்கேற்பதற்கான பயிற்சிகளை அளித்து வருகிறேன். அவர்களும் மதுரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக முன்பதிவு செய்து இருக்கிறார்கள். காளைகளை களத்தில் இறங்கி சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்”, என்கிறார் அவர்.

”மாடுபிடி வீரர்களுக்கு சவால் விட காளைகள் தயார்”

பழனி நெய்க்காரப்பட்டி சேர்ந்த என்பவர் தனது இரண்டு காளைகளை அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக டோக்கன் முன்பதிவு செய்திருந்தார். அவருக்கான டோக்கன் முன்பதிவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

“எனது இரண்டு காளைகளையும் அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் களம் இறக்குவதற்காக தயார் செய்து இருக்கிறேன்.

மாடுபிடி வீரர்களுக்கு எனது காளைகள் களத்தில் ஆட்டம் காட்டி வெற்றி பெறும் என்று நம்புகிறேன்”, என கூறுகிறார்

இளைஞர்கள் மத்தியில் ஆர்வம்

மதுரை ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம், Special arrangement

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தப்பட்டு அதன் மீதான தடை நீங்கிய பிறகு ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதிலும், ஜல்லிக்கட்டு போட்டியில் களம் இறங்கி விளையாடுவதில் இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்தது. இதனை முறைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கொண்டுவரப்பட்டன.

அதன்படி, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு காளைகள் அரசு அறிவித்த இணையதளத்திற்கு சென்று மாட்டின் உரிமையாளர், மாடுபிடிவீரர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து உடல் தகுதியை உறுதி செய்து அதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்து முன்பதிவு செய்த வேண்டும். அரசு சார்பில் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும்.

இந்தாண்டு ஜல்லிக்கட்டில் போட்டிகளில் பங்கேற்க காளையின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டினர்.

எத்தனை பேர் பங்கேற்பார்கள்?

மதுரை ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம், Special Arrangement

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக மதுரை நிர்வாகத்தின் சார்பில் இணையதளம் முன்பதிவு கடந்த 10-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு தொடங்கி 11-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடைந்தது. இதில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 2,400 காளைகள், 1,318 காளையர்கள், பாலமேட்டில் 3,677 ஜல்லிக்கட்டு காளைகள், 1,412 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்து இருந்தனர்.

இந்த இரண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை விட உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 6,099 காளைகள், 1,784 மாடுபிடி வீரர்கள் என மொத்தமாக இந்த மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் சேர்த்து பங்கேற்க 12,176 ஜல்லிக்கட்டு காளைகளும் அவற்றுடன் போட்டியிட 4,514 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்து இருந்தனர்.

இந்த வீரர்கள், காளைகள் ஜல்லிக்கட்டு நாட்களுக்கு முன்பாக தேர்வு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு களத்தில் 50 வீரர்கள் என்ற சுழற்சி முறையில் களமிறக்கப்படுவார்கள்.

ஜல்லிக்கட்டு மைதானத்தில் போட்டி எப்போது?

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை பகுதியில் 66 ஏக்கர் பரப்பளவில் 61.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு ஏது தழுவுதல் அரங்கம் இந்த மாத இறுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டு தொடர்ச்சியாக 5 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »