Press "Enter" to skip to content

ஆவடி ராணுவ ஆயுதத் தொழிற்சாலையில் துப்பாக்கிச் சூடு: 7 குண்டுகள் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு

சென்னையை அடுத்த ஆவடியில் ராணுவ ஆயுதத் தொழிற்சாலையில் பாதுகாப்பு ஊழியர் சக ஊழியரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சென்னை ஆவடியில் மத்திய அரசுக்கு சொந்தமான பாதுகாப்பு துறை சார்ந்த பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கனரக வாகன தொழிற்சாலையில் பணிபுரியும் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த நிலாம்பர் சிங்கா என்பவர், கடந்த இரண்டு நாட்களாக மன உளைச்சலால் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று நள்ளிரவு 12.15 மணி அளவில் பாதுகாப்பு வீரர்கள் தூங்கிக் கொண்டிருந்த அறையை நோக்கி இன்சா ரக துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளார் நிலாம்பர். இதில் அறையில் தூங்கிக் கொண்டிருந்த இமாச்சல பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த கிரிஜெஷ் குமார் என்ற சக வீரர் மீது குண்டு பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் தனது துப்பாக்கியை கொண்டு எஞ்சிய வீரர்களை சுடப் போவதாக நிலாம்பர் மிரட்டியுள்ளார். அதிர்ஷ்டவசமாக வேறு எவர் மீதும் குண்டு படவில்லை. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பாதுகாப்புத் துறை அதிகாரி, துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு உத்தரவிட்டார். இல்லையெனில் சுட்டு பிடிக்க நேரிடும் என எச்சரித்த பின் அவர் துப்பாக்கியை கீழே வைத்து சரணடைந்தார்.
மொத்தம் உள்ள 20 குண்டுகளில் ஏழு குண்டுகள் கிரிஜெஷ் குமாரின் கழுத்து மூக்கு முழங்கால் உள்ளிட்ட பகுதிகளில் பாய்ந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஈஸ்வரன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலாம்பர் சிங்காவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »