Press "Enter" to skip to content

பிரசவ வார்டில் நூலகம் – வியக்க வைக்கும் அரசு மருத்துவமனை

ஒரு அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் நூலகத்தை அமைத்து மக்களின் வாசிப்பு பழக்கத்திற்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை என்றால் அங்கே மருந்தகம் இருப்பது இயற்கை. ஆனால் இந்த மருத்துவமனையின் பிரசவ வார்டில் நூலகம் ஒன்றை ஏற்படுத்தி தந்துள்ளார் தலைமை மருத்துவர் அனுரத்னா. அதுவும் இவரது சொந்த செலவில் புத்தகங்களை வாங்கி இந்த நூலகத்தை அமைத்துள்ளார்.

பிரசவ வார்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த நூலகம் குறித்து இவர் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவையும் இட்டுள்ளார். அதைப் படித்த பலர் நூல்களை இலவசமாக அளித்துள்ளனர். இவ்வாறு கிடைத்த ஏற்குறைய 500 நூல்கள் இப்போது அங்கே படிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளன. உணவு, மருத்துவம், பெண்கள் நலம், குழந்தை வளர்ப்பு எனப் பல தலைப்புகளில் விதவிதமான புத்தகங்கள் கிடைப்பதால் பல தாய்மார்கள் அங்கேயே உட்கார்ந்து படிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் புத்தக வாசிப்பின் மூலம் மனநிலை சீராக இருப்பதாகவும் கவலையற்று நேரத்தை கழிக்க முடிவதாகவும் இதன் மூலம் பயன்பெற்றவர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த நூலகத்திற்கு முன்னாள் குருவிகளை வளர்த்து வருவதால் அதன் கீச்சு ஒலிகள் மனத்திற்கு இதமாக இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். ‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப இயங்கும் இந்த மருத்துவனை மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »