Press "Enter" to skip to content

சிட்டுக் குருவிகளை காப்பாற்றும் வடசென்னை பக்‌ஷி ராஜன்.

சிட்டுக் குருவிகளுக்கு கூடு கட்டித் தருகிறார் வடசென்னையைச் சேர்ந்த குருவி கணேசன்.
ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் வரும் பக்‌ஷி ராஜனை நினைவு படுத்துகிறார் வடசென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். கணேசன் என்ற அந்த இளைஞர் சிட்டுக் குருவிகளின் இனம் அழியாமல் இருக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறார். சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணி செய்து வருகிறார் கணேசன். இவர் வட சென்னையில் உள்ள ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர். அப்பகுதி மக்கள் இவரை குருவி கணேசன் என்றே அழைக்கின்றனர்.

இவர்., சிட்டுக் குருவிகளை பாதுகாத்து வளர்க்க சிறிய மரப் பெட்டியிலான கூடுகளை தயாரிக்கிறார். தன் வேலை நேரம்போக மீதமுள்ள நேரத்தில் குருவிகளுக்கான கூடுகளை உருவாக்கி, அதனை அப்பகுதி மக்களுக்கும் பள்ளிகளுக்கும் சென்று கொடுத்து வருகிறார். அழிவின் விளிம்பில் நிற்கும் சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தன்னால் இயன்ற சிறிய முயற்சி இது என அவர் கூறுகிறார்.
கடந்த 8 மாதங்களாக குருவி கணேசனும், அப்பகுதி பள்ளி மாணவர்களும் இணைந்து ஆயிரம் குருவிக் கூடுகளை தயாரித்துள்ளனர். அதில் 70% வரையிலான கூடுகளை அவர்களே பராமரித்தும் வருகின்றனர்.
கணேசன் தன்னுடைய கல்லூரி நாட்கள் முதலே சுற்றுச்சூழல் குறித்து மிகுந்த அக்கறை கொண்டவர். உணவுச் சங்கிலியில் சிட்டுக் குருவிகள் முக்கிய பங்கு வகிப்பதை உணர்ந்த அவர் குருவிகளை பாதுகாப்பதற்கு தன்னால் ஆன உதவிகளை செய்யவேண்டும் என நினைத்திருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன் ராயபுரத்தில் குடியேறிய அவர் தொடர்ச்சியாக அப்பகுதி மக்களுக்கு சூழலியலில் குருவிகளின் பங்களிப்பு குறித்தும் அவற்றை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் வீடு வீடாக சென்று எடுத்துக் கூறியிருக்கிறார்.

ஆரம்பத்தில் பணம் கொடுத்து குருவிக் கூடுகளை வாங்கி, அப்பகுதி மக்களுக்கு இலவசமாக கொடுத்து வந்திருக்கிறார் கணேசன். ஆனால் அது அதிக செலவு பிடித்திருக்கிறது. பிறகு மரப்பலகை உள்ளிட்ட மூலப் பொருட்களை வாங்கி விடுமுறை நாட்களில் குருவிக் கூடுகளை தயாரித்து விநியோகம் செய்து வருகிறார். கிட்டத்தட்ட 1000 குருவிக் கூடுகளை ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை பகுதி வாசிகளுக்கு கணேசனும் அவருடைய மாணவர்களும் இணைந்து தயாரித்து வழங்கியுள்ளனர். மேலும் இவர் அப்பகுதி மாணவர்களுக்கு குருவிக் கூடுகள் தயாரிப்பது குறித்து பயிற்சியும் அளித்து வருகிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »