Press "Enter" to skip to content

காதலிக்க மறுத்ததால் பெண் கொலை – இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜோதி நகர் நல்லிக் கவுண்டர் வீதியை சேர்ந்தவர் தங்கதுரை(32). இவர் அதேப்பகுதியை சேர்ந்த சுப்பிரிகா(24) என்ற பெண்ணை ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் தங்கதுரையின் காதலை சுப்பிரிகா ஏற்கவில்லை. ஆனால் அவர் தொடர்ந்து சுப்பிரிகாவிடம் தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்ததால், காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீசார் தங்கதுரையை அழைத்து எச்சரிக்கை செய்தனர். அதைத்தொடர்ந்து அவர் இனிமேல் சுப்பிரிகாவை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று எழுதி கொடுத்துவிட்டு சென்றார்.

இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து சுப்பிரிகாவை சந்தித்த தங்கதுரை, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். ஆனால், அதற்கு சுப்பிரிகா சம்மதிக்காததால் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதை தடுக்க சென்ற சுப்பிரிகாவின் தாயார் மற்றும் சகோதரரையும் தங்கதுரை கத்தியால் குத்தியதில், இருவரும் படுகாயமடைந்தனர்.

இது குறித்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தங்கதுரையை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவை 4வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், தங்கதுரைக்கு, கொலை பிரிவுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், சுப்பிரிகாவின் தாயார் மற்றும் சகோதரரை கத்தியால் குத்தி கொல்ல முயன்றதற்கு தலா 7 ஆண்டுகள் சிறையும், கொலை செய்யும் நோக்கத்தில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்ததற்கு 10 ஆண்டு சிறையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ரூ.41 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »