Press "Enter" to skip to content

‘மாஸ்க்’ ஏற்றுமதிக்கு தடை – கட்டுப்பாட்டல் தடுமாறும் வியாபாரிகள்

சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் தாக்க ஆரம்பித்தது. அதன்பின் வேகமெடுத்த இந்த வைரஸ் தற்போதுவரை 1,355 பேரின் உயிரைப் பறித்துள்ளது. இதுவரை 60,015 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சீனாவைச் சேர்ந்தவர்கள் 48,206 பேர் ஆவர். ஹூபே மாகாணத்தில் மட்டும் ஒரே நாளில் 242 பேர் கொரோனாவுக்கு உயிரி‌ழந்திருப்பது உலக நாடுகளிடையே அச்சத்தை ‌ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில்‌ கொரோ‌னா வைரஸ் தாக்கம் நாளுக்கு‌நாள் அதி‌கரித்து வரும் நி‌லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்மாத இறுதிவரை பள்ளிகள் திறக்கப்படாது என சீன அரசு அறிவித்துள்ளது. ‌ஒரே நாளில் ‌அதிக உயிரிழப்புகள் தொடர்வதை சுட்டிக்காட்டியுள்ள உலக‌ சுகாதார ‌வல்லுநர்கள், கொரோ‌னா வைரஸை உடனடி‌யாக கட்டுப்படுத்தவில்லை எனில் பேரழிவை ஏற்படுத்திவிடும் என எச்சரித்துள்ளனர். சீனாவில் 60 சதவீதம் பேரை கொரோனா தாக்கக்கூடும் என நியூயார்க் டைம் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் ஷாங்காய் நகரில் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த சர்வதேச கார் பந்தய போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் இம்மாதம் 24ஆம் தேதி முதல் 2‌‌7ஆம் தேதி‌ வரை ‌உலக மொபைல் ‌மாநாடு நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே மாநாட்டில் பங்கேற்கவிருந்த ‌நோக்கியா, வோடாஃபோன், டாய்ச் டெலிகாம் உள்ளிட்ட‌‌ முன்‌னணி நிறுவனங்‌கள், கொரோனா வைரஸ் அச்சத்தால் மாநாட்டிலிருந்து விலகிய நிலையில் அந்த மாநாடும் ரத்து செய்யப்பட்டதாக‌ அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து ‘மாஸ்க்’கை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு முற்றிலும் தடைவிதித்துள்ளது. வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் மற்றும் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் ஆகியவற்றின் சார்பாக இதற்கான அறிவிப்பு வெளியானதால் வெளிநாடுகளுக்கு முகமூடிகளை அனுப்புவதில் சிக்கல் ஏற்றப்பட்டுள்ளதாக சில வியபாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய பயணி ஒருவர், “சில நாட்களுக்கு முன்னால் என் உறவினர் வெளிநாடு சென்றார். அப்போது அவர் ஒரு கிலோ அளவிற்கு ‘மாஸ்க்’கை எடுத்து போக முயன்றார். அப்போது அதற்கு தடை இருப்பதாக சொன்னார்கள். விசாரித்த போது அது உண்மை எனத் தெரிந்தது” என்றார்.

இதுகுறித்து சென்னை விமானநிலையத்தில் உள்ள அதிகாரி கூறும் போது, “கடந்த ஜனவரி 31ஆம் தேதியே இதற்கான அறிவிப்பு இந்திய அரசு சார்பில் வெளியாகி விட்டது. ஆகவே வெளிநாடுகளில் பற்றாக்குறை வரும்போது அவர்கள் பிறநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வார்கள். அப்போது நமது தேவைக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விடும். ஆகவே முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்கள் தங்களின் சொந்த தேவையை தாண்டி ஏற்றுமதி செய்வது முடியாது” எனக் கூறினார்.
அசோக் நகர் பகுதியில் கடை நடத்தும் ஒருவருக்கு சிங்கப்பூரில் இருந்து ஒரு ஆர்டர் வந்துள்ளது. ஆனால் அவரால் சரியாக ஏற்றுமதி செய்ய முடியவில்லை. அதற்கு இந்தத் தடைதான் காரணம் என்கிறார் அந்த வியாபாரி.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »