Press "Enter" to skip to content

தமிழக வரவு செலவுத் திட்டம் இன்று தாக்கல் – கணிப்பொறி திரையில் எம்.எல்.ஏ.க்கள் காண ஏற்பாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் வரவு செலவுத் திட்டம் என்பதால் என்னென்ன அறிவிப்புகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை:

தமிழக சட்டசபையில் கடந்த 2018-ம் ஆண்டில் காகிதமில்லா சட்டசபை என்ற திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை (வரவு செலவுத் திட்டம்) காகித வடிவில் தாக்கல் செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் சட்டசபையில் காதிதமில்லா திட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் முதல் முறையாக எலக்ட்ரானிக் வடிவிலான முதல் நிதிநிலை அறிக்கை (இ-வரவு செலவுத் திட்டம்) இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. அதுவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.

இ-வரவு செலவுத் திட்டத்தை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். அவர் சுமார் 1.30 மணி நேரம் வரவு செலவுத் திட்டத்தை வாசிப்பார். அவர் வாசிக்கும் வாசகங்கள், எம்.எல்.ஏ.க்களின் மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் கணிப்பொறி திரையில் வார்த்தைகளாக ஓடும். அதுதவிர டேப்லெட் என்ற கருவியும் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றிலும் வரவு செலவுத் திட்டம் தொகுப்பை காணலாம்.

கொரோனா தொற்று நீடித்து வருவதால், சென்னை கலைவாணர் அரங்கத்தின் 3-வது மாடியில் சட்டசபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வரவு செலவுத் திட்டம் கூட்டத் தொடரும் கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கி செப்டம்பர் 21-ம் தேதிவரை நடைபெறுகிறது. அரசுத் துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களும் இந்த கூட்டத் தொடரில் நடைபெறுகின்றன.

சமீபத்தில் தமிழகத்தின் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், முந்தைய அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகள் பற்றி பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் கடந்த ஆட்சியைப் பற்றி பல விமர்சனங்களை முன்வைத்தார்.அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீடு, நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், சட்டசபையில் கடும் விவாதங்கள் வெடிக்கலாம். வெளிநடப்பு, வெளியேற்றம் என பல நிகழ்வுகள் நடக்கும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே இந்த கூட்டத் தொடர் முழுவதும் பரஸ்பர குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு எப்போதும் சட்டசபை சூடாகவும், பரபரப்புடனும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »