Press "Enter" to skip to content

ஆண்டுக்கு 6,000 வழங்கும் விவசாயிகள் நிதி திட்டத்துக்கு வரவு செலவுத் திட்டம் ஒதுக்கீடு 20% குறையும்

* திட்டம் அறிவித்தும் பலன் இல்லை
* ஆதார் சரிபார்ப்பு கூட முடியவில்லை
* கிசான் சம்மான் திட்டத்துக்கு கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒதுக்கீடு 75,000 கோடி.
* நடப்பு ஆண்டில் அரசு வழங்கும் தொகை 44,000 கோடிதான்.
* இந்த திட்டத்துக்கு பதிவு செய்துள்ள 9.5 கோடி விவசாயிகளில் 7.5 கோடி பேருக்குதான் ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 நிதி வழங்கும் திட்டத்துக்கு வரும் நிதியாண்டுக்கு பட்ஜெட்டில் 20 சதவீதம் குறைவாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அதோடு, விவசாயிகள் வருவாயை இரட்டிப்பாக்குவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இதற்கிடையில், கடந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு கிசான் சம்மான் நிதி திட்டத்தை  மத்திய அரசு அறிவித்தது. இதன்படி விவசாயிகளுக்கு 2,000 வீதம் 3 தவணைகளாக ஆண்டுக்கு 6,000 வழங்கப்படும். இதற்காக 75,000 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்த திட்டத்தால் 14.5 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தகுதி உடைய விவசாயிகள் அனைவருக்கும் இந்த திட்ட பலன் சென்று சேரவில்லை.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் சிலர் கூறியதாவது:  கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சுமார் 14.5 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 நிதி வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தில் பதிவு செய்தது 9.5 கோடி பேர்தான். அதிலும், 7.5 கோடி பேரின் ஆதார் மட்டுமே சரிபார்க்கப்பட்டுள்ளது. ஆதார் சரிபார்ப்புக்கு பிறகுதான், விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பப்படுகிறது.  எனவே, நடப்பு ஆண்டில் இந்த திட்டத்துக்கு அரசு ₹44,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யும். அதோடு, அடுத்த 2020-21 நிதியாண்டுக்கு இந்த திட்டத்துக்காக பட்ஜெட்டில் ஏற்கெனவே மத்திய அரசு ஒதுக்கீடு செய்வதாக அறிவித்திருந்த 75,000 கோடியில் 20 சதவீதம் குறைத்து 60,000 ஒதுக்கீடு செய்தால் போதும் என வேளாண் அமைச்சகம் கோரியுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் விவசாயிகள் பற்றிய தகவல்கள் இல்லை. புதிதாக திரட்டி, ஆதார் சரிபார்க்க வேண்டியுள்ளதால் திட்டம் மிக மந்த கதியில்தான் செயல்படுத்தப்படுகிறது என்றனர்.

Source: dinakaran

More from வணிகம்More posts in வணிகம் »