Press "Enter" to skip to content

பிஎஸ் 6 தரநிலை வாகனங்களால் கல்லெண்ணெய், டீசல் விலை ஒரு ரூபாய் வரை உயரும்: எண்ணெய் நிறுவனம் தகவல்

புதுடெல்லி: பிஎஸ் 6 தர நிலை வாகனங்கள் அறிமுகம் ஆவதால், ஏப்ரல் மாதத்தில் இருந்து  பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 50 காசு முதல் ஒரு ரூபாய் வரை உயரும் என எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.  வாகன மாசுவை குறைக்கும் வகையில் சர்வதேச தர நிலைக்கு ஏற்ப பிஎஸ் 6 தர வாகனங்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விற்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  எனவே, பிஎஸ் 6 ரக எரிபொருட்கள் விற்பனையும் ஏப்ரல் 1ம் தேதிக்குள் துவக்க வேண்டும். இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் (ஐஓசி) தலைவர் சஞ்சீவ் சிங் கூறியதாவது: அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களிலும் பிஎஸ் 6 தர நிலைக்கான எரிபொருளை உற்பத்தி துவங்கி விட்டது. அடுத்த மாதம் இவை எண்ணெய் நிறுவன டெப்போக்களுக்கு வந்து சேரும். எனவே, பிஎஸ் 6 ரக வாகன விற்பனைக்கான ஏப்ரல் 1ம் தேதி இலக்கை நூறு சதவீதம் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல், டீசல் உற்பத்தி இருக்கும். எனவே ஏப்ரல் மாதத்தில் இருந்து பிஎஸ் 6 எரிபொருள் கிடைப்பதில் எந்த தட்டுப்பாடும் இருக்காது.

 பிஎஸ் 6 ரக எரிபொருள் உற்பத்திக்காக சுத்திகரிப்பு நிலையங்களை தரம் உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் சுமார் 30,000 கோடி முதலீடு செய்துள்ளன. ஐஓசி 17,000 கோடி முதலீடு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் பிஎஸ் 6 எரிபொருட்களின் விலை, பிஎஸ் 4 எரிபொருட்களை விட அதிகம். எனவே, பெட்ரோல், டீசல் விலை இதற்கேற்ப உயரும். இதை இப்போதே துல்லியமாக கூற முடியாது. இருப்பினும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 50 காசு முதல் ஒரு ரூபாய் வரை அதிகரிக்கலாம். தற்போதைய நிலவரப்படி, ஐஓசி நிறுவனத்தின் 121 மொத்த எரிபொருள் சேமிப்பு முனையங்களில் 80 சதவீதம் பிஎஸ் 6 தர நிலைக்கு ஏற்ப மாற்றப்பட்டு விட்டன. அடுத்த மாத இறுதிக்குள் அனைத்து முனையங்களும் மாற்றப்பட்டு விடும் என்றார்.

Source: dinakaran

More from வணிகம்More posts in வணிகம் »