Press "Enter" to skip to content

முக்கிய 8 துறைகள் வளர்ச்சி அதிகரிப்பு

புதுடில்லி : கடந்த டிசம்பர் மாதத்தில், முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி, 1.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக, எதிர்மறையாக இருந்த, எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சி, டிசம்பரில் மீட்டுஎடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டு, இதே மாதத்தில், முக்கிய துறைகளின் வளர்ச்சி, 2.1 சதவீதமாக இருந்தது. டிசம்பர் மாதத்தில் இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாக, நிலக்கரி, உரம், மற்றும் சுத்திகரிப்பு பொருட்கள் ஆகிய துறைகள் அமைந்து உள்ளன.அதேசமயம், மதிப்பீட்டு மாதத்தில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தி குறைந்துள்ளது.

நிலக்கரி, உரம், சுத்திகரிப்பு பொருட்கள் ஆகியவையே சாதகமான வளர்ச்சியை பெற்றுள்ளன. உருக்கு துறை, 1.9 சதவீதம் சரிவை கண்டுள்ளது. இதைப் போலவே சிமென்ட் உற்பத்தியும், 5.5 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டில், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், முக்கிய துறைகள் வளர்ச்சி, 0.2 சதவீதமாக உள்ளது. இதுவே, அதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில், வளர்ச்சியானது, 4.8 சதவீதமாக இருந்தது.கடந்த ஆகஸ்டு துவங்கி, நவம்பர் மாதம் வரையிலான நான்கு மாதங்களில், முக்கிய துறைகளின் வளர்ச்சி குறைவாகவே இருந்தது.

தற்போது, டிசம்பர் மாதத்தில், நான்கு மாதங்களுக்குப் பிறகு வளர்ச்சி காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். எட்டு முக்கிய துறைகளில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை அடங்கும். இவை, நாட்டின் தொழில்துறை உற்பத்தியை கணக்கிடுவதில், 38 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.

Source: dinamalar

More from வணிகம்More posts in வணிகம் »