Press "Enter" to skip to content

ஜி.எஸ்.டி., ஆண்டு கணக்கு தாக்கல் ; சமூக வலைதளத்தில் வதந்தி

சென்னை : ஜி.எஸ்.டி., ஆண்டு கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நீட்டிக்கப்படவில்லை; அது தொடர்பான வதந்திகளை, வரி செலுத்துவோர் தவிர்க்க வேண்டும் என, மத்திய மறைமுக வரிகள் விதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையில், ஆண்டு முழுவதுக்கும், ஒரே கணக்கு தாக்கல் செய்ய, ‘படிவம் 9’ உள்ளது. ஆண்டுக்கு, 2 கோடி ரூபாய்க்கு கீழ், வரவு – செலவு உள்ள அனைத்து வணிகர்களும், ‘படிவம் 9’ தாக்கல் செய்ய வேண்டும்.இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வரவு – செலவு உள்ள நிறுவனங்கள், ‘படிவம் 9ஏ’ மற்றும் ‘9சி’ தாக்கல் செய்ய வேண்டும். கடந்த, 2017 – 18ம் நிதி ஆண்டுக்கான, படிவம் 9 தாக்கல் செய்வதற்கான அவகாசம், நேற்றுடன் முடிந்தது.

இந்நிலையில் இதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டதாக, சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.இது குறித்து, மத்திய மறைமுக வரிகள் விதி வாரியம், தன், ‘டுவிட்டர்’ பதிவில், ‘ஜி.எஸ்.டி., ஆர்., படிவம் 9 தாக்கல் செய்வதற்கான அவகாசம் முடிந்தது. ‘பிப்., 14ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, ‘டுவிட்டர்’ போன்ற சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அந்த தகவல் போலியானது. அவகாசம் நீட்டிப்பு வழங்கப்படவில்லை. இது போன்ற வதந்திகளை, வரி செலுத்துவோர் தவிர்க்கவும்’ என, தெரிவித்துள்ளது.

படிவம் 9 தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தாக்கல் செய்யாமல் விட்டவர்களுக்கு, இனி தாமத கட்டணம் வசூலிக்கப்படும். நாள் ஒன்றுக்கு, 100 ரூபாய் தாமத கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். இதுவும் குறுகிய காலத்துக்கான சலுகை தான். அதிக நாட்கள் தாமதமாகும்போது, கட்டணம் மிகவும் அதிகரிக்கும் என, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Source: dinamalar

More from வணிகம்More posts in வணிகம் »