Press "Enter" to skip to content

நாட்டின் பொருளாதார அடித்தளம் வலுவாக உள்ளது: நிர்மலா சீதாராமன் உரை

2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். அப்போது, நாட்டின் பொருளாதார அடித்தளம் வலுவாக உள்ளதாகத் தெரிவித்தார். அதில் அவர் பேசியதாவது,

தொலைநோக்குச் சிந்தனையுடன் சரக்கு மற்றும் சேவை வரியை கட்டமைத்தவர் மறைந்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி. நாட்டின் பொருளாதாரச் சீர்திருத்தங்களில் ஜிஎஸ்டி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. ஜிஎஸ்டி வரிமுறை படிப்படியாக நாட்டை பொருளாதார ரீதியாக ஒருங்கிணைத்து வருகிறது.

எதிர்காலத்தின் மீதான எதிர்பார்ப்பு, அனைவருக்கும் சமமான பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பான சமூகம் ஆகிய 3 முக்கியக் குறிக்கோள்களை முன்வைத்து இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்களின் வருமானத்தை அதிகரித்து அவர்களின் செலவீனத் திறனை மேம்படுத்துவதாகும்.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் புத்துணர்ச்சியுடன் செயல்படும் மத்திய அரசு மக்களுக்கு தேவையானவற்றை பணிவுடனும், அர்ப்பணிப்புடனும் செய்ய கடமைப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

சிறுபான்மையின மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மக்கள் மற்றும் பெண்கள் ஆகியோரின் கனவுகளை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜிஎஸ்டி காரணமாக போக்குவரத்துத்துறை மற்றும் தளவாடங்கள் துறை உள்ளிட்டவை மேம்பட்டுள்ளன. இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தரத் (எம்எஸ்எம்இ) துறைகள் வளர்ச்சியை சந்தித்து வருகின்றன. நுகர்வோருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் ஏற்படுகிறது.

மத்திய அரசின் கடன் 2014 மார்ச் மாதத்தில் 52.2 சதவீதத்திலிருந்து 2019 மார்ச் மாதத்தில் 48.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் இளைஞர்களிடம் உற்சாகத்தையும், ஆற்றலையும் ஏற்படுத்தி வளர்ச்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது.

2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. வறட்சி ஏற்பட்டுள்ள 100 முக்கிய மாவட்டங்களில் நீர் மேலாண்மைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இதற்கு ரூ.15 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் திட்டத்தின் கீழ் 20 லட்சம் விவசாயிகளுக்கு முழுமையான சூரிய மின்சக்தி குழாய்களை அமைக்க அனுமதி வழங்கப்படும். விரைவில் அழிந்துபோகக்கூடிய விவசாயப் பொருட்களை தேவையானப் பகுதிகளுக்கு விரைவாகக் கொண்டு சேர்க்கும் விதமாக மத்திய ரயில்வே மற்றும் தனியார் கூட்டமைப்பின் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் கிசான் ரயில் சேவை ஏற்படுத்தப்படும்.

விவசாயம், நீர்ப்பாசனம், ஊரக வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய துறைக்கு ரூ. 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சுய உதவிக்குழுக்களால் நடத்தப்படும் கிராம சேமிப்புத் திட்டம், விவசாயிகளுக்கு பொருளாதாரத்தை சேமிக்கும் நிலையை வழங்குகிறது. கிராமங்களில் உள்ள பெண்கள் ‘தான்ய லட்சுமி’ என்ற அந்தஸ்தை மீண்டும் பெற உதவுகிறது.

புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும். கல்வித்துறைக்கு ரூ. 99,300 கோடியும், திறன் மேம்பாட்டுக்கு ரூ. 3,000 கோடியும் ஒதுக்க பரிசீலிக்கப்படுகிறது. நாட்டின் சிறந்த 100 கல்வி நிறுவனங்கள் மூலம் ஆன்லைன் முறையில் பட்டப்படிப்பு அளவிலான கல்வித்திட்டம் ஏற்படுத்தப்படும்.

பொது மற்றும் சிறப்பு நிபுணர்கள் அடிப்படையில் தகுதிவாய்ந்த மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே அரசு-தனியார் இணைப்பு முறையில் ஒரு மருத்துவ கல்லூரியை ஒரு மாவட்ட மருத்துவமனையுடன் இணைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த திட்டம் வரையறுக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்படும். அனைத்து மருத்துவமனைகளிலும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ. 12,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தொழில்துறையின் வளர்ச்சிக்கு ரூ. 27,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறை கட்டமைப்புக்கு ரூ.1.7 லட்சம் கோடி மற்றும் எரிசக்தித்துறைக்கு ரூ.22,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தில்லி-மும்பை இடையிலான அதிவிரைவுச்சாலை 2023க்குள் கட்டி முடிக்கப்படும். மும்பை-ஆமதாபாத் இடையிலான அதிவிரைவு ரயில் சேவைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நாடு முழுதும் உள்ள முக்கிய நகரங்களில் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும். 

உதய் திட்டத்தின் கீழ் 2024க்குள் 100 புதிய விமானநிலையங்கள் ஏற்படுத்தப்படும். ரயில்வேத்துறைக்கு சொந்தமான இடங்களில் சூரிய மின்சக்தி உற்பத்தி அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. முக்கிய நகரங்களுக்கு தேஜஸ் விரைவு ரயில் திட்டம் விரிவுபடுத்தப்படும். பெண் குழந்தைகள் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பெண் குழந்தைகளின் சதவீதம் அதிகரித்துள்ளது. 

10 கோடி குடும்பங்களின் ஊட்டச்சத்து குறித்து ஸ்மார்ஃபோன்களின் மூலம் 6 லட்சம் அங்கன்வாடி ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். நீர் மேலாண்மை திட்டத்துக்கு ரூ. 3.6 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களின் நலத்திட்டத்துக்காக ரூ.9,500 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

பழங்குடியினர் நலத்திட்டத்துக்கு ரூ.53,700 கோடியும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்திட்டத்துக்கு ரூ. 85,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. காற்று மாசு பிரச்னையைத் தடுக்க ரூ.4,400 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 2022-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்படுகிறது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் வளர்ச்சிக்காக ரூ.30,757 கோடியும், லடாக் பகுதியின் வளர்ச்சிக்கு ரூ.5,958 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆதிச்சநல்லூர், ராகிகரி, ஹஸ்தினாபூர், சிவசாகர், தோலவிரா ஆகிய இடங்களில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலாத்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

வரிவரம்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரூ. 5 லட்சம் வரை வருமான வரி இல்லை
ரூ.5 – 7.5 லட்சம் வரை : 10%
ரூ.7.5 – 10 லட்சம் வரை : 15%
ரூ.10 – 12.5 லட்சம் வரை: 20%
ரூ.12.5 – 15 லட்சம் வரை: 25% என குறைக்கப்பட்டுள்ளது.
ரூ.15 லட்சத்துக்கு மேல்: 30% ஆகவே நீடிக்கும் என்று தெரிவித்தார்.

Source: dinamani

More from வணிகம்More posts in வணிகம் »