Press "Enter" to skip to content

இளம் முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள்

எதிர்கால இலக்குகளை அடைய திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். மேலும், வாழ்க்கையில் நிதி சுதந்திரம் பெறவும் சரியான முறையில் முதலீடு செய்ய வேண்டும். இளம் தலைமுறையினரை பொருத்தவரை பல விஷயங்களில் நன்கறிந்தவர்களாக இருந்தாலும், முதலீடு என்று வரும் போது அவசரம், பொறுமையின்மையை கொண்டுள்ளனர். இதனால் ஏற்படக்கூடிய நிதி தவறுகளை தவிர்க்கும் வழிகள்:

இளம் வயதில் முதலீடு:

சேமிப்பதும், முதலீடு செய்வதும் வயதானவர்களுக்கான என கருதுவது தான், பெரும்பாலான இளம் தலைமுறையினர் செய்யும் முக்கிய தவறாகிறது. இளம் வயதில் முதலீடு செய்வதன் மூலம், நீண்ட கால நோக்கில் மறுமுதலீட்டின் பலனை முழுவதும் பெறலாம்.

ஈர்க்கும் கடன்:

கடந்த தலைமுறையினருக்கு இருந்ததை விட, இளம் தலைமுறையினருக்கு நிதி தகவல்களை நாடும் வசதி அதிகம் உள்ளது. அதே போல கடனுக்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. உடனடி கடன் கிடைத்தாலும், வாழ்க்கைத்தேவைகளை கடனில் நிறைவேற்றும் பழக்கம் ஏற்றது அல்ல. தேவைகளுக்காக, திட்டமிட்டு சேமிக்க பழக வேண்டும்.

செலவு பழக்கம்:

கடன் பழக்கம் போலவே செலவு பழக்கம் கட்டுப்பாடில்லாமல் இருக்கிறது. விருப்பங்களையும், கனவுகளையும் உடனே நிறைவேற்றிக்கொள்ள துடிக்கின்றனர். இன்று செலவு செய்வோம், சேமிப்பை பின் பார்த்துக்கொள்ளலாம் என்பது பாதகமானது. செலவு செய்யும் முன் சேமிப்புக்கு பணம் ஒதுக்க வேண்டும்.

‘ரிஸ்க்’ தேவை:

கடந்த தலைமுறையினர் பெரும்பாலும் வைப்பு நிதி போன்ற பாதுகாப்பான முதலீடுகளை நாடினர். இவை நிலையான பலன் அளித்தாலும், வளர்ச்சி வாய்ப்பை கொண்டிருக்கவில்லை. நிதி உலகில் ரிஸ்கே எடுக்காமல் இருப்பதும் ஒரு ரிஸ்க் தான். இளம் வயதில், பங்கு முதலீடு போன்றவற்றை கவனமாக மேற்கொள்வது நல்ல பலன் தரும்.

காப்பீடு எங்கே?

முதலீட்டை துவக்கும் முன் காப்பீடு பெற்றிருக்க வேண்டும். இளம் வயது தானே ஆகிறது, அதற்குள் காப்பீடு எதற்கு என நினைப்பது தவறு. இளம் வயதில் பாலிசி பெறும் போது, பிரிமியம் குறைவாக இருக்கும். எதிர்கால பாதுகாப்பு அளிக்கும். பணி புரியும் நிறுவனம் அளிக்கும் மருத்துவ காப்பீடு மட்டும் போதும் என்பதும் தவறு.

Source: dinamalar

More from வணிகம்More posts in வணிகம் »