Press "Enter" to skip to content

ஆண்டுக்கு 5,000க்கு மேல் கிடைக்கும் மியூச்சுவல் பண்ட் லாபத்துக்கும் வரி பிடித்தம்: வரவு செலவுத் திட்டம் அறிவிப்பால் முதலீட்டுக்கு வேட்டு

புதுடெல்லி: மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் கிடைக்கும் லாபத்துக்கும் வரி பிடித்தம் செய்யப்படும் என, பட்ஜெட் அறிவிப்பில் தெரிய வந்துள்ளது. இதனால், மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்ய தயக்கம் காட்டும் நிலை உருவாகும். காப்பீடு துறையை போல இத்துறைக்கும் இதனால் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.  தற்போது, மியூச்சுவல் பண்ட் மூலதன ஆதாயத்துக்கு நான்கு வகையாக வரி விதிப்பு செய்யப்படுகிறது. அதாவது, பங்குச்சந்தையுடன் தொடர்புடைய மியூச்சுவல் பண்ட் முதலீடுகளில், குறுகிய கால லாபமாக இருந்தால், அதாவது முதலீடு செய்து ஓராண்டுக்குள் விற்கப்பட்டால், 15 சதவீத வரி மற்றும் 4 சதவீத செஸ் வசூலிக்கப்படுகிறது. நீண்டகால ஆதாயமாக இருந்தால் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் இருக்கும் பட்சத்தில் 10 சதவீத வரி மற்றும் 4 சதவீதம் செஸ் வசூலிக்கப்படுகிறது. ஒரு நிதியாண்டில் ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ள ஆதாயத்துக்கு வரி கிடையாது. இதுபோல், கடன் மியூச்சுவல் பண்டாக இருந்தால், 3 ஆண்டுக்குள் விற்று கிடைக்கும் குறுகிய கால லாபத்துக்கு, முதலீட்டாளரின் வருமான வரி வரம்புக்கு உட்பட்டு வரி வசூலிக்கப்படும். அதாவது, முதலீட்டாளரின் ஆண்டு வருவாய் 20 சதவீத வரி பிரிவில் இருந்தால், மியூச்சுவல் பண்ட் லாபத்துக்கு 20 சதவீத வரி மற்றும் 4 சதவீத செஸ், 30 சதவீத வரி பிரிவில் இருந்தால் 30 சதவீத வரி மற்றும் செஸ் வசூலிக்கப்படும். நீண்ட கால ஆதாயமாக இருந்தால் 20 சதவீத வரி உண்டு. இதுதான் தற்போதைய நடைமுறை.

 இந்நிலையில், வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்ற அறிவிப்புகளின்படி, மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் கிடைக்கும் லாபத்துக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என வருமான வரி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அவர்கள் கூறியதாவது: பட்ஜெட் அறிவிப்புகளின்படி, மியூச்சுவல் பண்ட் டிவிடென்ட்டுகள் மீது மட்டுமின்றி, அவற்றின் மூலம் கிடைக்கும் ஆதாயத்துக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என தெரிகிறது. அதாவது, வரும் நிதியாண்டில், மியூச்சுவல் பண்ட் முதலீடு மூலம் ஒருவருக்கு கிடைக்கும் லாபம் ஆண்டுக்கு ₹5,000க்கு மேல் இருந்தால் அதற்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட உள்ளது.  பட்ஜெட்டின்படி, புதிதாக 194கே வரிப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி ஒரு நிதியாண்டில் மியூச்சுவல் பண்ட் மூலம் கிடைக்கும் லாபம் ₹5,000க்கு மேல் இருந்தால் அதற்கு 10 சதவீத டிடிஎஸ் உண்டு என தெரியவருகிறது. பொதுவாக மியூச்சுவல் பண்ட் மூலம் கிடைக்கும் டிவிடெண்ட்களுக்கு வருமான வரிப்பிரிவு 10 (35)ன்படி வரி விலக்கு உண்டு. இது குறித்து தெளிவான விளக்கத்தை மத்திய அரசு தரவேண்டும்.
 மியூச்சுவல் பண்ட் முதலீடுகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால், டிடிஎஸ் பிடித்தம் இந்த  முதலீடுகளை பாதிக்கும். ஏற்கெனவே, வருமான வரியில் செய்த  மாற்றங்களால், காப்பீடு நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகலாம் என்ற  கலக்கத்தில் உள்ளன. டிடிஎஸ் பிடித்தம் செய்தால் மியூச்சுவல் பண்ட்  முதலீட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றனர்.

Source: dinakaran

More from வணிகம்More posts in வணிகம் »