Press "Enter" to skip to content

ஜூனியர் ஹாக்கி: பெனால்டி சூட்டில் ஆஸி.யை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா

image

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னோவில் நடைபெற்று வருகிறது. இன்று அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன.

முதல் அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி- பெல்ஜியம் அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 4-3 பெல்ஜியம் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.

2-வது அரையிறுதியில் போட்டியை நடத்தும் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை அந்த அணியின் டோம் கிரேக் கோலாக மாற்றினார். இதனால் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலைப் பெற்றது.

42-வது நிமிடத்தில் இந்தியாவின் குர்ஜந்த் சிங் ஒரு கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலைப் பெற்றது. அடுத்த 6-வது நிமிடத்தில் மன்தீப் சிங் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்தியா 2-1 முன்னிலைப் பெற்றது. ஆனால் 57-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் லாச்லன் ஷார்ப் ஒரு கோல் அடிக்க, ஸ்கோர் 2-2 என மீண்டும் சமநிலைப் பெற்றது.

அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 4-2 என வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா – பெல்ஜியம் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »