Press "Enter" to skip to content

டி வில்லியர்ஸ்க்காக கதவு திறந்தே இருக்கும்: மார்க் பவுச்சர்

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் டி வில்லியர்ஸ் இடம் பிடிப்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்கிறார் மார்க் பவுச்சர்.

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடருக்கு தென்ஆப்பிரிக்கா அணி தயாராகி வந்தபோது திடீரென அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக டி வில்லியர்ஸ் அறிவித்தார்.

அதன்பின் உலக கோப்பை நெருங்கும்போது மீண்டும் அணிக்கு திரும்ப தயார் என்று தெரிவித்தார். ஆனால் அணி நிர்வாகம் அவரது கோரிக்கையை நிராகரித்தது. தென்ஆப்பிரிக்கா அந்த தொடரில் படுதோல்வியடைந்தது.

முன்னணி வீரர்கள் ஓய்வு பெற்று வெளியேறினர். இதனால் தென்ஆப்பிரிக்கா தள்ளாட ஆரம்பித்தது. அணியை மீண்டும் சிறந்த நிலைக்கு கொண்டு வர மாற்றங்கள் செய்யப்பட்டது. ஸ்மித் இயக்குனராகவும், மார்க் பவுச்சர் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கு சிறந்த அணியை தயார்படுத்த தென்ஆப்பிரிக்கா விரும்புகிறது. இதற்கிடையில் டி20 அணிக்கு திரும்ப தயார் என்று டி வில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்திருந்தார். மார்க் பவுச்சர் டி வில்லியர்ஸ் திரும்புவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டி வில்லியர்ஸ்க்காக கதவு திறந்தே இருக்கும் என மார்க் பவுச்சர் மீண்டும் ஒருமுறை தெளிவுப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து மார்க் பவுச்சர் கூறுகையில் ‘‘டி வில்லியர்ஸ் மீடியா மற்றும் பொது இடங்களில் இதுகுறித்து பேசி வருகிறார். ஆனால் என்னுடன் ஒருபோதும் பேசியது கிடையாது. அவருடனான பேச்சுவார்த்தை எப்படி செல்லப் போகிறது குறித்து விரைவில் எங்களுக்கு தெரியவரும்.

நாங்கள் உலக கோப்பை தொடருக்கு சிறந்த அணியை அனுப்ப விரும்புவோம் என்பதை நான் பதவி ஏற்ற முதல் நாளில் இருந்தே கூறி வருகிறேன். சிறந்த பார்மில் இருந்து அணிக்கு திரும்ப அவர் விரும்பினால், நாங்கள் கேட்டுக்கொண்ட காலத்திற்குள் அவராகவே இடம் பிடிப்பார். அணிக்கு அவர் சிறந்த வீரராக இருப்பார் என்றால், அவருக்கு கட்டாயம் இடமுண்டு.

இதில் ஈகோ, கருத்து வேறுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. உலக கோப்பைக்கு சிறந்த அணியை அனுப்பி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய குறிக்கோள்’’ என்றார்.

ஏபி டி வில்லியர்ஸ்க்கு இன்று பிறந்த நாள். அவர் 36 வயதை பூர்த்தி செய்து 37-வது வயதிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »