Press "Enter" to skip to content

அவிஷ்கா, மெண்டிஸ் அபார சதம் – வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை

அம்பந்தோட்டையில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் அவிஷ்கா பெர்னாண்டோ, குசால் மெண்டிஸ் ஆகியோரின் அபார சதத்தால் இலங்கை அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஒருநாள் தொட்ரை கைப்பற்றியது.

கொழும்பு:

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கைஅணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி அம்பந்தோட்டையில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ சிறப்பான தொடக்கம் கொடுத்தார்.

ஆனாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கருணரத்னே ஒரு ரன்னிலும், குசால் பெராரா ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ், அவிஷாவுடன் இணைந்து பொறுப்புடன் ஆடினார். இருவரும் நிதானமாக ஆடி சதமடித்தனர். அவிஷ்கா பெர்னாண்டோ 127 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 119 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 345 ரன்கள் குவித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் காட்ரெல் 4 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 346 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட்இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் மட்டும் தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். அவர் 51 ரன்னில் வெளியேறினார்.

நிகோலஸ் பூரன் 30 ரன்னிலும், கீமோ பால் 21 ரன்னிலும், ரோஸ்டன் சேஸ் 20 ரன்னிலும் அவுட்டாகினர்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 39.1 ஓவரில் 184 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி 161 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கை சார்பில் ஹசரங்கா, சண்டகன் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், நுவான் பிரதீப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »