Press "Enter" to skip to content

ரஞ்சி டிராபி இறுதி போட்டி: முதல் பந்துவீச்சு சுற்றில் முன்னிலை பெற்றும் சாம்பியன் ஆக பெங்கால் போராட்டம்

ரஞ்சி டிராபி இறுதி போட்டி டிராவை நோக்கி செல்வதால் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற பெங்கால் அணி போராடி வருகிறது.

ரஞ்சி டிராபி இறுதி போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் சவுராஷ்டிரா – பெங்கால் அணிகள் விளையாடி வருகின்றன. கடந்த 9-ந்தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா 425 ரன்கள் குவித்தது. அந்த அணியின் வசவாதா சிறப்பாக விளையாடி 106 ரன்கள் விளாசினார். பெங்கால் அணி சார்பில் ஆகாஷ் தீப் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் சுமார் இரண்டரை நாட்கள் பேட்டிங் செய்தன. அதன்பின் பெங்கால் அணியில் சிறப்பாக விளையாடியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் பெங்கால் 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் அடித்திருந்தது. சட்டர்ஜீ 47 ரன்களுடனம், சகா 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று நான்காவது நாள் ஆட்டம் நடைபெற்றது. இன்னும் ஒருநாள் மட்டுமே மீதமுள்ள நிலையில், ஆடுகளம் மிகப்பெரிய அளவில் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லாததால் முதல் இன்னிங்சில் எப்படியாக முன்னிலை பெற்று விடவேண்டும் என்ற நோக்கத்தில் பெங்கால் பேட்டிங் செய்தது.

சட்டர்ஜீ, சகா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சட்டர்ஜீ அரைசதம் அடித்ததை தொடர்ந்து சகாவும் அரைசதம் அடித்தார். சட்டர்ஜீ  81 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.  இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தது.

அடுத்து மஜும்தார் களம் இறங்கினார். சகா 64 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின வந்த ஷபாஸ் அகமது 16 ரன்னில் வெளியேறினார். இதனால் பெங்கால் அணி 263 ரன்கள் எடுப்பதற்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்தது.

7-வது விக்கெட்டுக்கு மஜும்தார் உடன் நந்தி ஜோடி சேர்ந்தார். மஜும்தார் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இந்த ஜோடி இன்றைய 4-வது நாள் ஆட்டம் முடியும் வரை தாக்குப்பிடித்து விளையாடியது. பெங்கால் அணி 4-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் எடுத்துள்ளது.

மஜும்தார் 58 ரன்களுடனும், நந்தி 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை பெங்கால் அணி 71 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் நான்கு விக்கெட்டுக்கள் உள்ளன. மஜும்தார் – நந்தி ஜோடி 91 ரன்கள் சேர்த்துள்ளது.

நாளை காலை ஆட்டம் தொடங்கியதும் ஒரு மணி நேரம் இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடினால் முன்னிலை வகிக்க வாய்ப்புள்ளது. போட்டி டிரா ஆனால் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதனால் எப்படியாவது 71 ரன்களை கடந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் நாளைய ஆட்டத்தை பெங்கால் அணி தொடங்கும்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »