Press "Enter" to skip to content

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சி ரத்து

கொரோனா வைரஸ் மற்றும் ஐ.பி.எல். போட்டி தள்ளி வைக்கப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பயிற்சி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

117 நாடுகளில் உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் பரவி 5,400 பேர் வரை பலியாகி உள்ளனர். 1½ லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இந்த வைரஸ் அதிவேகமாக பரவுவதால் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது தள்ளி வைக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாட்டு அரசும் கேட்டுக்கொண்டுள்ளன. ஏற்கனவே சர்வதேச அளவில் பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையே பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல். போட்டி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஏப்ரல் 15-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்த போட்டி வருகிற 29-ந் தேதி தொடங்க இருந்தது.

இதற்கிடையே கொரோனா வைரஸ் மற்றும் ஐ.பி.எல். போட்டி தள்ளி வைக்கப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) வீரர்களின் பயிற்சி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். போட்டிக்காக டோனி தலைமையில் சி.எஸ்.கே. வீரர்கள் கடந்த 2-ந்தேதி முதல் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். வீரர்களின் பயிற்சி 19-ந்தேதி முடிய இருந்தது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இன்று முதல் இந்த பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.

இதற்கிடையே ஜப்பானில் ஜூலை-ஆகஸ்டு மாதங்களில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்வது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஓ.சி.) ஆலோசனை செய்கிறது.

உலக சுகாதார அமைப்பின் அறிவுரையின்படி ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்வது அல்லது தள்ளி வைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றே சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஓ.சி.) தலைவர் தாமஸ் பேஜ் தெரிவித்தார்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான 3 ஒருநாள் தொடரில் முதல் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. மற்ற 2 ஆட்டங்களை ரசிகர்கள் இல்லாமல் நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து இருந்தது.

இதற்கிடையே கொரோனா வைரஸ் காரணமாக எஞ்சிய 2 ஆட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து, இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து ஆகியவையும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிராண்ட் பிரீ பார்முலா-1 கார்பந்தயம், இந்தியன் ஓபன் பேட்மின்டன் ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மே 31-ந்தேதி வரை எந்த ஒரு செஸ் போட்டியும் நடைபெறாது என்று அகில இந்திய செஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. வருகிற 19-ந்தேதி இந்த தொடர் தொடங்க இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி உடனடியாக நாடு திரும்புகிறது.

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கோவாவில் இன்று நடக்கிறது. ரசிகர்கள் இல்லாமல் இந்த போட்டி நடத்தப்படுகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »