Press "Enter" to skip to content

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா?- 3 வாரங்கள் காத்திருக்க அணி உரிமையாளர் கூட்டத்தில் முடிவு

இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா? இல்லையா? என்பதில் ஒரு முடிவுக்கு வர 3 வாரங்கள் காத்திருப்பது என்று அணி உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை:

8 அணிகள் இடையிலான 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 29-ந்தேதி மும்பையில் தொடங்க இருந்தது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பாதிப்பு, ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவதற்கு தடை, வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு வருவதற்குரிய ‘விசா’ வழங்குவது ஏப்ரல் 15-ந்தேதி வரை நிறுத்தம் போன்ற காரணங்களால் ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 15-ந்தேதி வரை தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் ஐ.பி.எல். விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா, ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் பட்டேல், அணிகளின் உரிமையாளர்களான ஆகாஷ் அம்பானி (மும்பை இந்தியன்ஸ்), ஷாருக்கான் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), நெஸ் வாடியா (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), பார்த் ஜின்டால் (டெல்லி கேப்பிட்டல்ஸ்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஐ.பி.எல். ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்துவது குறித்து 7 விதமான அம்சங்கள் விவாதிக்கப்பட்டது. இதில் போட்டிகளின் எண்ணிக்கையை குறைப்பதும் அடங்கும். அணிகளை இரண்டு பிரிவாக பிரித்து லீக் சுற்றில் மோதி அதில் டாப்-4 அணிகளை பிளே-ஆப் சுற்றில் விளையாட வைப்பது அல்லது வாரஇறுதி நாட்களில் இரட்டை ஆட்டங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது அல்லது 60 ஆட்டங்களையும் ரசிகர்கள் இன்றி நடத்துவது உள்ளிட்ட வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

ஆனால் வெளிநாட்டுக்கு போட்டியை மாற்றுவது குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. ஜூன் மாதம் சர்வதேச போட்டிகள் வந்து விடும் என்பதால் ஐ.பி.எல். போட்டியை நடத்த வேண்டும் என்றால் மே 31-ந்தேதிக்குள் முடித்தாக வேண்டிய நெருக்கடியில் இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளது. இப்போதைக்கு ஓரிரு வாரங்கள் காத்திருந்து நிலைமையை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தில் கலந்து கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் நெஸ் வாடியா நிருபர்களிடம் கூறியதாவது:-

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி எப்போது தொடங்கும் என்பது இப்போதைக்கு யாருக்கும் தெரியாது. 2-3 வாரங்கள் கழித்து நாட்டில் கொரோனா பாதிப்பு நிலைமையை ஆய்வு செய்து அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்வோம். அதற்குள் கொரோனா பாதிப்பு குறைந்து விடும் என்று நம்புகிறோம்.

இங்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்திய கிரிக்கெட் வாரியமோ அல்லது ஐ.பி.எல். நிர்வாகமோ அல்லது அதிகாரபூர்வ ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகத்தினரோ யாரும் வருவாய் இழப்பு குறித்து துளி கூட சிந்திக்கவில்லை. இத்தகைய சூழலில் ஆதாயம் அடைய விரும்பவில்லை. பாதுகாப்பு அம்சங்கள் குறித்தே அதிகமாக விவாதித்தோம். மக்களின் உயிர், பாதுகாப்பு தான் முதலில் முக்கியம் என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டனர். அது தான் எங்களது பிரதான நோக்கம். வருமானம் எல்லாம் 2-வது பட்சம் தான். அரசாங்கம் என்ன உத்தரவு பிறப்பித்தாலும் அதை முழுமையாக பின்பற்றுவோம். இந்த மாதம் இறுதிவரை எந்த முடிவும் எடுக்கப்பட வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். எனவே பொறுத்திருந்து தான் நிலைமையை பார்க்க வேண்டும்.

இந்த முறை வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு வருவார்களா? என்று கேட்கிறீர்கள். அது பற்றி எனக்கு தெரியாது. ஏப்ரல் 15-ந்தேதி வரை தடை இருக்கிறது. அதன் பிறகு பார்க்கலாம். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்தால் சிறப்பாக இருக்கும். நடக்காமல் போனாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இவ்வாறு நெஸ் வாடியா கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »