Press "Enter" to skip to content

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பானர்ஜி மரணம்

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பி.கே.பானர்ஜி மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா:

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான பிரதீப் குமார் பானர்ஜி வயது முதிர்வு காரணமாக மூச்சுத் திணறல், இருதய கோளாறு, நிமோனியா, முடக்கு வாதம் உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 2-ந் தேதி முதல் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசத்தின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பகலில் மரணம் அடைந்தார்.

மறைந்த 83 வயதான பி.கே. பானர்ஜிக்கு, பவுலா, பூர்ணா என்ற 2 மகள்கள் உள்ளனர். அவருடைய இளைய சகோதரர் பிரசுன் பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் எம்.பி.யாக உள்ளார். தனது 16 வயதில் சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் அறிமுகமான பி.கே.பானர்ஜி 1955-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடினார். அவர் 84 சர்வதேச போட்டிகளில் விளையாடி 65 கோல்கள் அடித்துள்ளார்.

1962-ம் ஆண்டில் ஜகர்தாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய கால்பந்து அணியில் இடம் பிடித்து இருந்த அவர் 1958, 1966-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியிலும் பங்கேற்றுள்ளார். 1956-ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 4-வது இடம் பிடித்த இந்திய அணியில் இடம் பெற்ற அவர், 1960-ம் ஆண்டு ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை கவனித்தார். அர்ஜூனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்ற அவர் 2004-ம் ஆண்டில் சர்வதேச கால்பந்து சங்கத்தின் (பிபா) ஆர்டர் ஆப் மெரிட் என்னும் உயரிய விருதை தன்வசப்படுத்தினார்.

காயம் காரணமாக 1967-ம் ஆண்டு கால்பந்து போட்டியில் இருந்து ஒய்வு பெற்ற பானர்ஜி, மோகன் பகான் கிளப் அணியின் பயிற்சியாளராகவும், இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். 1970-ம் ஆண்டு பாங்காக்கில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்தார்.

இந்திய கால்பந்தின் சிறந்த வீரர்களில் ஒருவராக விளங்கிய பி.கே.பானர்ஜி மறைவுக்கு, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அகில இந்திய கால்பந்து சம்மேளன பொதுச்செயலாளர் குஷால் தாஸ், இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, இந்திய கிரிக்கெட் வீரர் விருத்திமான் சஹா உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பிலும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »