Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு- ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்க முடிவு?

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை ஒத்தி வைக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள், தடகள சங்கங்கள், வீரர்-வீராங்கனைகள் வலியுறுத்தி வருகின்றனர்.

டோக்கியோ:

32-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை ஒத்தி வைக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள், தடகள சங்கங்கள், வீரர்-வீராங்கனைகள் வலியுறுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் அமெரிக்க நீச்சல் சங்கம், ஒலிம்பிக் போட்டியை ஓராண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்து இருந்தது. ஓரிரு மாதங்களில் நிலைமை சரியாகி விட் டால் ஒலிம்பிக்கை நடத்தி விடலாம் என்று போட்டி அமைப்பாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

இதற்கிடையே ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்சோ அபே, பாராளுமன்றத்தில் பேசும்போது, “கொரோனா வைரஸ் அச்சறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கும் நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைப்பதை தவிர வேறு வழியில்லை” என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, முழு நிறைவான ஒலிம்பிக் போட்டியை நடத்தவே ஜப்பான் விரும்புகிறது. ஆனால் இது கடினமானது என்று தோன்றுகிறது.

முதலில் நாம் வீரர்களை பற்றி யோசிக்க வேண்டியுள்ளது. எனவே ஒலம்பிக் போட்டியை ஒத்தி வைப்பது தவிர்க்க முடியாததாகவே படுகிறது” என்றார்.

இந்த நிலையில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விரைவில் ஆலோசனை நடத்த உள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாஹ் கூறியதாவது:-

ஒலிம்பிக் போட்டி குறித்து நான்கு வாரங்களுக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும். இதில் போட்டியை ஒத்தி வைப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

அதே வேளையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யும் திட்டமில்லை. போட்டியை ரத்த செய்வது, எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்காது அல்லது யாருக்கும் உதவாது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாக குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »