Press "Enter" to skip to content

ஊரடங்கை மீறும் நபர்களுக்கு தனிமைப்படுத்துதல் அல்லது சிறை: கடும் நடவடிக்கை தேவை என கவுதம் கம்பிர் வலியுறுத்தல்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், ஊடரங்கு போன்ற நடவடிக்கைகளில் அரசின் விழிமுறைகளை மீறும் பொதுமக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுதம் கம்பிர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த மாதம் தொடக்கத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. ஆனால் கடந்த வாரத்தில் இருந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளன.

இதனால் பிரதமர் மோடியின் வேண்டுகோள்படி நேற்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாடுமுழுவதும் பொதுமக்கள் சுயஊரடங்கை கடைபிடித்தனர். இதனால் நாடு முழுவதும் முக்கியமான சாலைகள் வெறிச்சோடின. பிரதமர் மோடி மாலை ஐந்து மணிக்கு மருத்துவர்களுக்கு நன்றி கூறும் விதமாக பொதுமக்கள் கைகளை தட்டி அல்லது மணி அடித்து ஆதரவை தெரிவிக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.

ஆனால் பொதுமக்கள் ஐந்து மணிக்குப்பிறகு மிகப்பெரிய அளவில் ஒன்றாக பொது இடங்களில் கூடி திருவிழா போன்று இதை கொண்டாடினர். அத்துடன் அதை வீடியோ எடுத்தும் வெளியிட்டிருந்தனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-ம் கட்ட நிலையில் உள்ளது. சமூக பரவல் என்ற 3-ம் நிலையை எட்டிவிடக்கூடாது என்பதற்கான எடுக்கப்பட்ட அரசின் முயற்சி இந்த சம்பவத்தால் சீர்குலைந்தது.

மேலும் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட மக்கள் ஜாலியாக வெளியில் சுற்றுகின்றனர். இதனால் பெரிய ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதை கட்டுப்படுத்த டெல்லி, ராஜஸ்தான் உள்பட பல மாநிலங்களில் ஊரடங்கு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசின் வழிமுறைகளை கடைபிடிக்காதவர்களை தனிமைப்படுத்த வேண்டும் அல்லது ஜெயில் அடைக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பா.ஜனதா எம்.பி.யும் ஆன கவுதம் காம்பிர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கவுதம் கம்பிர் டுவிட்டர் பக்கத்தில் ‘‘நீங்கள் செல்வதுடன் உங்களுடைய குடும்பத்தை கூட அழைத்துச் செல்வீர்கள். தனிமைப்படுத்துதல் அல்லது ஜெயில்… ஒட்டுமொத்த சமூதாயத்திற்கும் ஆபத்தாக இருக்காமல் வீட்டிலேயே தங்கியிருங்கள். வேலை மற்றும் தொழில் ஆகியவற்றிற்கான போராட்டம் மட்டுமே இது அல்ல. உயிருக்கும் சேர்த்துதான். உங்களை போன்றவர்களால் அத்தியாவசிய சேவைகள் வழங்கப்படுவது தடைபட்டுவிடக் கூடாது. ஊடரங்கை பின்பற்றுங்கள்… ஜெய் ஹிந்த்” என பதிவிட்டுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »