Press "Enter" to skip to content

அந்த விஷயத்தில் தெண்டுல்கரை விட கோலி சிறந்தவர் – டிவில்லியர்ஸ்

ரன் இலக்கை விரட்டிப்பிடிப்பதில் தெண்டுல்கரை விட கோலியே சிறந்தவர் என்று தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

புதுடெல்லி:

தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ‘இன்ஸ்டாகிராம்’ கலந்துரையாடலில் அவரிடம் விராட் கோலி (இந்தியா), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா) ஆகியோரில் சிறந்த பேட்ஸ்மேன் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு டிவில்லியர்ஸ் சாதுர்யமாக பதில் அளித்தார்.

அவர் கூறுகையில், ‘இது கடினமான கேள்வி. ஆனால் விராட் கோலி இயல்பாகவே பந்தை அடித்து ஆடும் திறமைபடைத்தவர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இவர்களை டென்னிஸ் பிரபலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். விராட் கோலியை டென்னிஸ் விளையாட்டின் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) போன்றவர் என்று சொல்வேன். ஸ்டீவன் சுமித், டென்னிசின் ரபெல் நடால் (ஸ்பெயின்) மாதிரி. மனரீதியாக மிகவும் வலுவானவர். ஆனால் அவரது ரன் குவிப்பும், களத்தில் நிற்கும் விதமும் அது இயல்பான ஒன்றாக தெரியாது. எது எப்படியோ கிரிக்கெட்டில் சுமித் நிறைய சாதனைகளை முறியடிக்கப்போகிறார். நான் பார்த்தமட்டில் உலகில் மனதளவில் வலிமைமிக்க சிறந்த வீரர்களில் சுமித்தும் ஒருவர். விராட் கோலியும் உலகம் முழுவதும் நடக்கும் போட்டிகளில் ரன்கள் குவிக்கிறார். நெருக்கடிக்கு மத்தியில் ஆட்டங்களில் வெற்றி தேடி தருகிறார்’ என்றார்.

இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர்-விராட் கோலி ஆகியோரை ஒப்பிடும்படி எழுப்பப்பட்ட கேள்விக்கு டிவில்லியர்ஸ் கூறுகையில், ‘எங்கள் இருவருக்கும் (கோலி, டிவில்லியர்ஸ்) முன்மாதிரி தெண்டுல்கர் தான். தான் விளையாடிய காலத்தில் மெச்சத்தகுந்த வீரராக ஜொலித்தார். அவரது சாதனையும், நளினமான பேட்டிங்கும், செயல்பாடும் அவரை பின்பற்றும் இளம் வீரர்களுக்கு மிகச்சிறந்த முன்உதாரணங்கள். கோலியும் இதைத் தான் சொல்வார்.

ஆனால் இலக்கை வெற்றிகரமாக துரத்திப்பிடிப்பதில் (சேசிங்) விராட் கோலியே கில்லாடி என்பது எனது தனிப்பட்ட கருத்து. அனைத்து வகையிலான போட்டிகளிலும், எல்லாவிதமான சூழலிலும் தெண்டுல்கரின் ஆட்டம் வியப்புக்குரியது தான். ஆனால் நெருக்கடிக்கு இடையே ‘சேசிங்’ செய்வதில் தெண்டுல்கரை விட கோலியே முன்னணியில் உள்ளார். இந்த வகையில் கோலியை மிஞ்சுவது கடினம். கோலி களத்தில் நிற்கும் போது எதிரணிக்கு எந்த இலக்கும் பாதுகாப்பானது கிடையாது. எதிரணி 330 ரன்களுக்கு மேல் குவித்தாலும், கோலி அந்த இலக்கை விரட்டிப்பிடித்து விடுவார்’ என்றார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவீர்களா? என்று மற்றொரு கேள்விக்கு 36 வயதான டிவில்லியர்ஸ் கூறுகையில், ‘பெங்களூரு அணிக்காகவே எஞ்சிய காலமும் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். பெங்களூரு அணிக்காக உற்சாகமாக அனுபவித்து விளையாடுகிறேன். இங்கு எனக்கு நிறைய நண்பர்களும் கிடைத்துள்ளனர். அவர்களை பிரியமாட்டேன். எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்பில்லை. அதே சமயம் சென்னை அணிக்கு எதிராக ஆடுவேன். அது எப்போதும் கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும்’ என்றார்.

‘விராட் கோலி எனது சிறந்த நண்பர். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது மட்டுமல்ல, ஆண்டு முழுவதும் அவ்வப்போது பேசுவோம். கோலி புதுப்புது விசயங்களை செய்வதில் ஆர்வம் கொண்டவர்’ என்றும் டிவில்லியர்ஸ் குறிப்பிட்டார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »