Press "Enter" to skip to content

இந்திய வீரர்கள் எனக்கு எதிராக பேச கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்: அப்ரிடி குற்றச்சாட்டு

யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட இந்திய வீரர்கள் எனக்கு எதிராக பேச கட்டாயப்படுத்தப் படுகிறார்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களான ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் உள்ளிட்ட பலரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியின் அறக்கட்டளைக்கு நிதியுதவி செய்தனர். இந்நிலையில் பாகிஸ்தானில் பொது இடத்தில் அப்ரிடி காஷ்மீர் தொடர்பாகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த வீடியோ வெளியாகி வைரலானது. இதனையடுத்து இந்திய வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து பேட்டியளித்த ஹர்பஜன் சிங் ‘‘இந்தியா குறித்தும், நம் பிரதமர் குறித்தும் ஷாகித் அப்ரிடி பேசியது வருத்தம் அளிக்கிறது. அதோடு அதை சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அப்ரிடி தனது அறக்கட்டளைக்காக உதவும்படி கேட்டுக்கொண்டார். மனிதாபிமான அடிப்படையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் தவிப்பவர்களுக்காகதான் நாங்கள் உதவினோம்.

நம் பிரதமர் கூட எல்லைகள், மதங்கள், சாதியை கடந்து கொரோனா வைரஸை எதிர்த்து போராட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்காகத்தான் நாங்கள் அவருக்கு உதவினோம். ஆனால் அந்த மனிதர் தற்போது நாட்டுக்கு எதிராக பேசியுள்ளார். இனி அவருடன் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை. நம் நாட்டைப்பற்றி அவதூராக பேச அவருக்கு எந்த அருகதையும் இல்லை’’ என காட்டமாக தெரிவித்திருந்தார்.

மேலும் யுவராஜ் சிங், கவுதம் காம்பீர், ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னாவும் அப்ரிடியின் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பாகிஸ்தானின் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஷாகித் அப்ரிடி ‘‘நான் எப்போதும் ஹர்பஜன் மற்றும் யுவராஜூக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன். அவர்கள் அந்த நாட்டில் இருக்கிறார்கள். எனக்கு எதிராக பேச கட்டாயப்படுத்தப்படுகிறார்கள், அவ்வளவுதான். இனிமேலும் இதுகுறித்து பேச விரும்பவில்லை’’ என தெரிவித்திருக்கிறார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »