Press "Enter" to skip to content

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவேன் என்பது முன்பே தெரியும்- அப்ரிடி

நிவாரண பணிகளுக்காக நிறைய இடங்களில் பயணிக்கும் போது கொரோனா தொற்றுக்கு உள்ளாக வாய்ப்பு உண்டு என்பது தெரியும் என சாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

கராச்சி:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் 40 வயதான சாகித் அப்ரிடி வெளியிட்ட வீடியோ பதிவு ஒன்றில் கூறியிருப்பதாவது:- கடந்த சில தினங்களாக எனது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாவதை கேள்விப்பட்டு இந்த வீடியோவை வெளியிடுகிறேன். கொரோனாவினால் பாதிக்கப்பட்ட முதல் 2-3 நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் கடந்த சில தினங்களில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதில் எனக்கு உள்ள மிகப்பெரிய கஷ்டமே எனது குழந்தைகளை கவனித்துக் கொள்ள இயலவில்லை, அவர்களை பாசத்தோடு கட்டித்தழுவ முடியவில்லை என்பது தான். அவர்களை தவற விடுவது வேதனை அளிக்கிறது. ஆனால் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது முக்கியம். உங்களை சுற்றியுள்ளவர்கள் பாதுகாப்புடன் இருக்க சமூக இடைவெளி அவசியமாகும். ஆனால் கொரோனா குறித்து பயப்பட தேவையில்லை. நிவாரண பணிகளுக்காக நிறைய இடங்களில் பயணிக்கும் போது கொரோனா தொற்றுக்கு உள்ளாக வாய்ப்பு உண்டு என்பதை அறிந்திருந்தேன்.

நல்லவேளையாக இந்த பாதிப்பு கொஞ்சம் தாமதமாக ஏற்பட்டது. இல்லாவிட்டால் இன்னும் நிறைய பேருக்கு உதவ முடியாமல் போயிருக்கும். நான் சீக்கிரம் குணமடைய எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »