Press "Enter" to skip to content

300 ஓட்டங்கள் எடுத்தால் இங்கிலாந்து அணியை வீழ்த்த முடியும்: பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி நம்பிக்கை

இங்கிலாந்து தொடரில் வெற்றி பெற வேண்டுமென்றால் நாங்கள் 300 ரன்களுக்கு மேல் சேர்க்க வேண்டும் என அசார் அலி தெரிவித்துள்ளார்.

3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று லாகூரில் இருந்து தனி விமானத்தில் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. டெஸ்ட் கேப்டன் அசார் அலி, துணை கேப்டன் பாபர் அசாம், முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அகமது உள்பட 20 வீரர்களும், தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல்-ஹக், மருத்துவ அதிகாரி உள்பட 11 பேரும் சமூக இடைவெளியுடன் விமானத்தில் அமர்ந்து பயணித்தனர். முதற்கட்ட சோதனையில் கொரோனா பாதிப்புக்குள்ளான 10 வீரர்கள் கழற்றி விடப்பட்டனர்.

பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அந்த நடைமுறை முடிந்ததும் ஜூலை 13-ந்தேதியில் இருந்து பயிற்சியை தொடங்குவார்கள். ரசிகர்கள் இன்றி நடக்க உள்ள இந்த போட்டித் தொடருக்கான அட்டவணை அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை.

முன்னதாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் பாகிஸ்தான் கேப்டன் 35 வயதான அசார் அலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மீண்டும் கிரிக்கெட் போட்டி தொடங்க இருப்பது உற்சாகம் அளிக்கிறது. வீரர்களும் களம் காண ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். ஊரடங்கு காலத்தில் ‘வாட்ஸ்அப்’ குரூப் மூலம் எங்களுக்குள் தொடர்பை உருவாக்கி, வீட்டிலேயே பயிற்சி மேற்கொண்டு தொடர்ந்து உடல்தகுதியை பேணுவதில் கவனம் செலுத்தினோம். அடிக்கடி மருத்துவ பரிசோதனை என்பது இப்போது விளையாட்டில் ஒரு அங்கமாகி விட்டது. அது போக போக பழகி விடும். அதனால் அது ஒரு பிரச்சினை அல்ல. இந்த கடினமான காலக்கட்டத்தில் கிரிக்கெட் மூலம் மக்களை மகிழ்விக்க முயற்சிப்போம்.

இங்கிலாந்து தொடர் எப்போதும் சவால் மிக்கது. கடந்த (2016-ம் ஆண்டில் 2-2 என்று டிரா), (2018-ம் ஆண்டில் 1-1 டிரா) இரண்டு சுற்றுப் பயணங்களில் விளையாடியது போன்று மீண்டும் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம்.

முந்தைய உள்நாட்டு டெஸ்டுகளில் எங்களது வீரர்களில் நிறைய பேர் சதம் அடித்தனர். அதே நம்பிக்கையுடன் இங்கிலாந்துக்கு பயணிக்கிறோம். இங்கிலாந்தில் ரன் எடுப்பது எப்போதும் கடினம்தான். ஆனால் எங்களது பேட்ஸ்மேன்கள் 300 மற்றும் அதற்கு மேல் ரன்கள் குவித்து விட்டால் இங்கிலாந்தை வீழ்த்த முடியும் என்று நம்புகிறேன்.

அலஸ்யர் குக் ஓய்வு பெற்ற பிறகு இங்கிலாந்தின் தொடக்க வரிசை பலவீனமாக காணப்படுகிறது. தொடக்க வரிசைக்கு சில ஜோடிகளை பயன்படுத்தி பார்த்து, இப்போதுதான் கொஞ்சம் சரியாகி இருக்கிறது. ஆனாலும் தொடக்க வரிசை பேட்ஸ்மேன்கள் குறித்து அவர்களுக்கு இன்னும் முழுமையான நம்பிக்கை வரவில்லை. இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்போம்.

எங்களது வேகப்பந்து வீச்சில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறோம். வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிடி பந்து வீசும் விதம் எந்த அணிக்கும் நெருக்கடியை கொடுக்கும். இதேபோல் நசீம் ஷா அதிக வேகத்துடன் வீசக்கூடியவர். முகமது அப்பாஸ் அனுபவம் வாய்ந்தவர். அத்துடன் திறமையான இளம் வீரர்களும் இருக்கிறார்கள். இவர்களால் இங்கிலாந்தின் எந்த பேட்டிங் வரிசையையும் சீர்குலைக்க முடியும்.

பந்தை தேய்ப்பதற்கு எச்சிலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருப்பதை பின்னடைவாக பார்க்கவில்லை. ‘டியூக்’ வகை பந்தில் நிறைய மெழுகு பூசப்பட்டு இருக்கும். அதனால் நீண்ட நேரம் பந்தின் பளபளப்பு தன்மை மாறாது. அது மட்டுமின்றி வியர்வையால் பந்தை பளபளப்பாக்க முடியும்.

இங்கிலாந்தும் வலுவான பந்துவீச்சை கொண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. அதுவும் உள்ளூர் சூழலில் அபாரமாக பந்து வீசுவார்கள். ஆனால் ஜாப்ரா ஆர்ச்சரை நீங்கலாக பார்த்தால் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்டோரின் பந்து வீச்சை நாங்கள் ஏற்கனவே சந்தித்து வெற்றியும் பெற்றிருக்கிறோம்.

இவ்வாறு அசார் அலி கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »